November 25, 2024
  • November 25, 2024
Breaking News
August 6, 2018

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

By 0 1115 Views

‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி.

தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவரிடம் நகரைக் கலக்கும் ‘சைக்கோ’ ஒருவனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்கிறார். இவரே கோக்குமாக்கான ஆளாக இருக்க, அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றினாரா என்கிற கதை.

காட்டாற்று வெள்ளமான காளி பாத்திரத்தில் ஜெய்வந்த். ஓங்குதாங்கான தோற்றமும் மிடுக்கும் அவரை ஹீரோ வேடத்துக்குத் தோதானவராகக் காட்டுகின்றன. ஆனால், கேரக்டரைசேஷன் என்று ஒன்றையும், அதற்கான காட்சிகளையும் இயக்குநர் திட்டமிடாமல் விட்டுவிட, எப்போதும் இடமும் வலமுமாக ஹைஸ்பீடில் நடப்பதும், மீசையைத் தடவி விடுவதுமாக இருக்கிறார். கிளைமாக்ஸில் நீளமான வசனம் பேசி நடிப்பது அவரது நடிப்பைக் காட்ட வாய்த்திருக்கும் நல்ல சந்தர்ப்பம்.

ஹீரோயின் என்று ஒருவரும் இல்லை. பாதிப்படத்தில் வரும் புதுமுகம் ‘ஐரா’வைக் கதாநாயகி என்றும் சொல்லமுடியவில்லை. அவரிடம் ஏதோ சஸ்பென்ஸ் இருப்பது புரிகிறது. பாதிப்படத்தில் ஜெய்வந்த் தேடும் சைக்கோ ஒரு பெண் என்கிறார்கள்.

அது ‘ஐரா’வாக இருக்கக்கூடும் என்று நாம் நினைக்க வேண்டும் என்பதற்காக. ஆனால், ஒரு இடத்தில் கூட அந்த சைக்கோ பாத்திரத்தின் பாடி லாங்குவேஜ் பெண்ணுக்குரியதாக இல்லை.

இப்படியே இந்த சஸ்பென்ஸ் கதையில் எதுவுமே எதிர்பாராத திருப்பமாக இல்லை. பட ஆரம்பத்திலேயே நாயகன் சிறுவயதில் வட்டிக் கொடுமையால் அனாதையாகும் பிளாஷ்பேக்கை சொல்லிவிட்ட பிறகு ஒரு ‘சைக்கோ’ வட்டித் தொழிலில் ஈடுபடும் சி.வி.குமாரைத் திட்டமிட்டுப் பழிவாங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லும்போது அது யார் என்பதை ப்ரீ கேஜி குழந்தை கூடச் சொல்லிவிடும்.

அதேபோல் ஒரு போலீஸ் என்கொயரி இவ்வளவு சொதப்பலாகவா இருக்கும். இவர்கள் தேடும் சைக்கோ திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை மட்டுமே பழிவாங்கிக்கொண்டிருக்க, அங்கேயே கேஸ் முடிந்து விடுகிறது. பொதுமக்களுக்கு அவனால் எந்தத் தொல்லையும் இல்லை என்றிருக்க, அங்கே வேலை செய்பவர்கள் வீடுகளைக் கண்காணித்தாலே போதுமே..?

அத்துடன் ஒன்று ஒரு சஸ்பென்ஸ் கதையை அதற்குரிய திரைக்கதையுடன் சொல்ல வேண்டும் அல்லது தமிழ் உணர்வும், சமூகப் பிரச்சினைகளும்தான் சொல்ல வேண்டிய கருத்து என்றால் அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் குழப்பியிருப்பதில் படத்தை எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை.

இயக்குநர் யுரேகா எப்போதும் வலியுறுத்திக்கொண்டிருக்கும் ‘சிவப்பு விளக்குப் பகுதி வேண்டும்’ என்கிற பிரசாரம் இதிலும் ஒரு பாடலாகவே உள்ளது. போதாக்குறைக்கு கஞ்சா அடிக்கும் கூட்டமொன்றின் பாடலையும் வலிந்து திணித்திருக்கிறார். அதையும் நியாயப்படுத்துகிறாரோ..? அந்த கஞ்சா கூட்டத்தை ஒரு போலீஸ் அதிகாரியாகக் கைது செய்யாமல் ஜெய்வந்தும் அவர்களுடன் உட்கார்ந்து கஞ்சா அடிக்கிறார்.

விஜய் சங்கரின் இசையும், மணி பெருமாளின் ஒளிப்பதிவும் தன் போக்கில் பயணிக்கும் இந்தப் படத்துக்குப் பெரிதாக எந்தப் பங்களிப்பையும் செய்ய முடியவில்லை.

பாரதிதாசன் பாடல் வரிகளுடன் படத்தை முடித்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஆலோசனை – நல்ல சிந்தனை மட்டுமே போதாது. அதற்கான செயலாக்கமும் வேண்டும்..!

காட்டுப்பய சார் இந்த காளி – காகித ஓடம்..!