கல்லா கட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டு களமிறங்கும் படங்கள் ஒரு வகை அதைத் தாண்டி ஒரு சமுதாயப் பிரச்சினையை விவாதப் பொருளாக்கி படம் பார்ப்போரை சிந்திக்க வைக்கும் படங்கள் இன்னொரு வகை.
இரண்டாவது வகைப் படம் இது. அப்படி சமுதாயத்தில் அங்கமாக இருக்கும் ஒரு காதல் பிரச்சினையை இதில் முன் வைக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
முதல் காட்சியில்… ஏன் முதல் ஷாட்டில் இருந்தே கதை சொல்ல ஆரம்பித்து சுபாஷ் பெறுகிறார் அவர்.
படத்தின் நாயகி லிஜோ மோல் ஜோஸ், தன் காதலைப் பற்றி அம்மா ரோகிணியிடம் முதல் முறையாகத் தெரிவிக்கிறார். பிரபல யூட்யூபராகவும் பெண்ணியவாதியாகவும் இருக்கும் ரோகிணி மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர் காதலை அங்கீகரிப்பதோடு காதலனை வார இறுதியில் வீட்டுக்கு வரவழைக்கச் செய்கிறார்.
வந்ததும்தான் தெரிகிறது வந்தது காதலர் அல்ல நிஜுவின் காதலி என்பது. ஆமாம்… ஒரு பெண்ணை நேசிக்கிறார் லிஜோ மோல். என்னதான் பெண்ணியவாதியாக இருந்தாலும் ஒரு தாயாக அதை ஜீரணத்துக் கொள்ள முடியாத ரோகிணி என்ன முடிவெடுத்தார், அது லிஜோவை எந்த வகையில் எல்லாம் பாதித்தது என்பது மீதிக் கதை.
மலையாள நடிகையாக இருக்கும் லிஜோ மோல் தமிழுக்கு வரும்போதெல்லாம் ஒரு புயலைக் கிளப்பி விட்டுப் போகிறார். இதில் அப்படியான ஓரினச்சேர்க்கை கொண்டவராக தில்லுடன் வருவது நம் புருவங்களை உயர்த்துகிறது.
தன் காதலைப் பற்றி அம்மாவிடம் விவாதிக்கத் தயங்குவது, அதை எதிர்க்கும் அம்மாவின் முடிவை எதிர்த்துப் பிடிவாதம் பிடிப்பது, தனது வாழ்க்கைத் துணையாகவே அனுஷா பிரபுவை எண்ணுவது, பெற்றோர் கண் முன்னே அதிரடி முடிவு எடுப்பது என்று படம் முழுக்க ஆக்கிரமிக்கிறார் லிஜோ.
அம்மாவாக வரும் ரோகிணியின் நடிப்பு அபாரம். என்னதான் பெண்ணியவாதியாக இருந்தாலும் மகளின் காதலைக் கேட்டு ஆடிப் போவதில் ஒரு அம்மாவின் தவிப்பைக் காட்டி நம்மைக் கலங்க வைக்கிறார்.
‘ரெட்டைவால் குருவி’யாக வரும் லிஜோவின் தந்தை வினித்துக்கும் அழுத்தமான வேடம். மகளின் முடிவைக் கேட்டு அவள் மனதை மாற்றுவதில் ஒரு தந்தையின் பங்கைக் கச்சிதமாக முன் வைக்கிறார் அவர்.
லிஜோவின் இணையாக வரும் அனுஷா பிரபுவும் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் முத்திரை பதிக்கிறார். அவரது ஃப்ளாஷ் பேக்கும் கண்கலங்க வைக்கிறது.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதைத் தாண்டி எல்லா பக்கங்களிலிருந்தும் இடியைத் தாங்கும் நபராக நடித்திருக்கிறார் லிஜோவின் நண்பர் காலேஷ்.
இவர்களுடன் அந்த வீட்டுப் பணிப் பெண்ணாக வரும் தீபா சங்கர் அசர அடிக்கிறார். வீட்டு மானம் வெளியே போய் விடக்கூடாது என்று ரோகிணி இனாமாகத் தரும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் புல்லரிக்க வைத்து விடுகிறார் தீபா.
முக்கிய பொருளைப் பற்றி விவாதிப்பதால் படம் மெதுவே நகர்கிறது – ஆனாலும் அலுக்கவில்லை. தன்னுடைய காதல் யாருடன் என்பதை லிஜோ உடைக்கும் இடம் நமக்கே ஒரு ஷாக்காகத்தான் இருக்கிறது.
ஒரு இயக்குனராக தான் சொல்ல வரும் பக்கத்து நியாயங்களை விவாதிக்கும் இயக்குனரின் திறன் வியக்க வைக்கிறது. அதிலும் இறுதியில் வரும் அந்த மொட்டை மாடி காட்சி கிளாஸ்.
ஆனால் அதை நியாயப்படுத்த லிஜோவைச் சுற்றி இருக்கும் அத்தனை பாத்திரங்களும் ஒவ்வொரு சமுதாய சிக்கலில் சிக்கி இருப்பவர்களாகக் காட்டுவது சற்று செயற்கையானது.
குறிப்பாக ரோகிணியின் கணவர் வினித் எதற்காக இன்னொரு பெண்ணை நாடிப் போனார் என்பதற்கான காரணம் வலு இல்லாதது.
படத்தின் தன்மையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பணியாற்றி இருக்கும் ஒளிப்பதிவாளர் ஶ்ரீ சரவணன், இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், எடிட்டர் டேனி சார்லசைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளில் இது நியாயம் என்றோ அல்லது நியாயமற்றது என்று எந்த முடிவுக்கு வர முடியாது. சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும் வரை ஓரினத் திருமணங்கள் பற்றி நாம் குரல் உயர்த்தவும் முடியாதுதான்.
அதை நோக்கிய விவாதங்கள் மட்டுமே அதற்கு வழி வகுக்கும். அந்த வகையில் தன் பக்கத்து நியாயங்களை அழுத்தமாக விவாதித்து இருப்பதில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
காதல் என்பது பொதுவுடைமை – பெண்ணும் பெண்ணும் நோக்கியா..!
– வேணுஜி