1996 இல் இந்தியில் இதே தலைப்பில் ஒரு படத்தை தீபா மேத்தா இயக்கியிருந்தார். அந்த நெருப்பு பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பற்றிக் கொள்வதாய் இருந்தது.
முதல் முதலில் இந்தியாவில் லெஸ்பியன்கள் பற்றிய விஷயங்களைப் பிட்டுப் பிட்டு வைத்த படமாய் அது இருந்தது. ஆனால் இந்த ஃபயர் அப்படி இல்லை. பெண்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஒரு காமுகனை வைத்து பிட்டு பிட்டாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே.
நாகர்கோவிலில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பெண்களை ஏமாற்றிய காமுகனைப் பற்றிய ஒரு கதையைக் கொண்டிருக்கும் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் அவர்.
பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்தான் அந்தக் காமுகன். பிசியோதெரபிஸ்டாக இருக்கும் அவர் ஈசிஆர் பக்கம் வைத்து ஒரு பெண்ணை படுக்கையில் வீழ்த்த, அவரைக் கொல்லும் ஒரு முகமூடி மனிதன் அவர் பிணத்தை தூக்கிச் செல்வதுடன் தொடங்குகிறது கதை.
அடுத்த காட்சியில் தன் மகனைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்கிறார்கள் அவரது பெற்றோர். அவரைத் தேடி விசாரணையில் இறங்கும் இன்ஸ்பெக்டர் அவரைப்பற்றி கேள்விப்படுவதெல்லாம் பெண்களை படுக்கையில் வீழ்த்துவதில் பாலாஜி முருகதாஸ் அசகாய சூரர் என்பதைத்தான்.
அப்படி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களாக சாந்தினி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, ரக்ஷிதா மகாலக்ஷ்மி என்று பட்டியல் கிடைக்க அவர்களை விசாரணை செய்யும் வேளையில், தான்தான் அவரைக் கொன்றதாக ஒரு முதியவர் சரண் அடைகிறார்.
பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் பரபரப்பும் கிளுகிளுப்புமான பின் பாதியில்…
தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மட்டுமல்லாது கதையைத் தாங்கிச் செல்லும் கதை நாயகனாகவும் தானே இருக்க வேண்டும் என்று ஜேஎஸ்கே நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒரு இன்ஸ்பெக்டருக்கான சிகை திருத்தமோ, அதற்கான சீருடை திருத்தமோ இல்லாமல் ஏதோ ஒரு வாட்ச்மேன் போலவே வந்து போய்க் கொண்டிருக்கிறார்.
ஒன்று நடிகராக அவர் பரிமளிக்க நல்ல இயக்குனரின் கையில் கிடைக்க வேண்டும்… அல்லது இயக்குனராக பரிமளிக்க நல்ல நடிகனை இயக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் திரிசங்கு நிலையில் தள்ளாடுகிறார் அவர்.
கட்டுமஸ்தான நாயகன் பாலாஜி முருகதாஸ்க்கு தைரியம் அதிகம்தான். வில்லனாக நடிப்பதற்கு இல்லை, ஆனால் இது போன்ற படத்தில் பெண்களைப் படுக்கையில் வீழ்த்துவதுடன் அவர்களுடன் இசகு பிசகாக நடிப்பது இலகுவான வேலை இல்லை.
அநேகமாக இப்படி அநேக அழகிகளுடன் ஜல்சாவாக நடிக்க வாய்ப்பு பெற்றதற்காகவே அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்காது என்று நம்பலாம்.
மற்றபடி இதுவரை தங்கள் படங்களில் காட்டாத அளவுக்கு சாந்தினி, சாக்ஷி அகர்வால், காயத்ரி எல்லாம் கவர்ச்சியைத் தூக்கி… அல்லது இறக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் ரக்ஷிதா வரும் காட்சிகளும் அவரிடம் முருகதாஸ் நடந்து கொள்ளும் முறையும் கண்டிப்பாக ஃபயர் பற்றிக் கொள்ளும் காட்சிகளாகத்தான் இருக்கிறது.
முன்பாதி விசாரணை என்ற பெயரில் படுத்துக் கிடக்கும் திரைக்கதையை பின்பாதியில் வரும் இந்த படுக்கையறைக் காட்சிகள் தூக்கி நிறுத்தி விடுகின்றன.
கிளைமாக்ஸ் காட்சி நம்பகத்தன்மையே இல்லாமல் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது. அது படத்துக்கு எந்த விதமான நேர்மறை பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவு, இசை எல்லாமே சுமார் ரகம். காசுக்கேத்த பணியாரம் என்கிற அளவில் தொழில்நுட்ப ரீதியாக போட்டிக்கு வராமல் ஒதுங்கும் படத்தில் படுக்கையில் இடம்பெறும் நான்கு பெண்களை நம்பியே இருக்கிறது.
அந்த நாலு பேருக்கு நன்றி..!
ஃபயர் – நல்ல மேட்டர்..!
– வேணுஜி