தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ராமநாதபுரத்தில் நடக்கும் கதை. அங்கு ஊர் பிரச்சனைகளுக்காக குரலை உயர்த்துவதுடன் இளமை மிடுக்குடன் ரொமான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி.
வறட்சி பூமிக்கே உரிய ரத்தச் சூட்டுடன் அலையும் அவர், இருபது வயதில் புரட்சி பேசி அலையாதவனும் இல்லை முப்பது வயதில் குடும்பத்துக்குள் முடங்காதவனும் இல்லை என்ற பதத்துக்கு அடையாளமாக காதலித்த அசலூர் ஐஸ்வர்யா ராஜேஷைக் கல்யாணமும் செய்து கொள்கிறார்.
ஒரு குழந்தையும் பிறந்த சூழலில் பிழைப்புக்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிறார் விஜய் சேதுபதி. அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் புயல் எப்படி வீசுகிறது – அதைத்தொட்டு அரசு அமைப்பு எப்படி அந்த வாழ்வை கலைத்துப் போடுகிறது என்பதை நாடி நரம்பு வலிக்க சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விருமாண்டி.
ஒரு பெரிய ஹீரோவுக்கான படமாக இல்லாமல் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாக இருந்தும் விஜய் சேதுபதி இதில் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது ஆகச்சறந்த காரியம்.
ஐஸ்வர்யா ராஜேஷின் தலையில்தான் மொத்தக் கதையும் உட்கார்ந்திருக்கிறது என்பது தெரிந்தும் தன் ஏரியாவில் தான் எதைச் செய்ய வேண்டுமோ அதை மிகச் சரியாக செய்து தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்கிறார் விஜய் சேதுபதி.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அரிய நாச்சியாகவே மாறி அதகளப் படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் இரட்டைச் சடையில் குறும்பு கொப்பளிக்கும் விளையாட்டு லட்சுமியாக வந்து அலம்பல் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், இடைவேளைக்குப் பிறகு கனத்த நடிப்பில் வீர லட்சுமியாக மாறி ரணகளம் செய்வதுடன் பல இடங்களில் நெஞ்சுருகவும் வைக்கிறார்.
“கண்ணகி மதுரையை தான் எரிச்சா… ஆனா எல்லா ஊரும் என்னால எரியும்… ” என்று கோபம் கொப்பளிக்கும் போது ‘அனல்’ வர்யா ஆகிறார் ‘ஐஸ்’ வர்யா.
விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி ஸ்ரீ-யை வெள்ளித்திரை இனி வளமாக பயன்படுத்துவதை காணமுடியும்.
ரங்கராஜ் பாண்டே, பூ ராமு, வேல ராமமூர்த்தி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் என பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு படத்தை உண்மை கதையாக உணரச் செய்திருக்கிறது.
ஜிப்ரானின் இசை உணர்வுகளை வருட, ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஏகத்துக்கு பிரமிக்க வைத்திருக்கிறது. இரவுக் காட்சிகளை கையாளத் தெரிந்தவர்தான் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற அடிப்படையில் ஏகாம்பரம் இந்தப்படத்தில் சிறந்து நிற்கிறார்.
சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் தீக்கங்குகள். சமகால அரசியலை வைத்து சூட்டை கிளப்பி இருக்கும் அவருடைய வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
எடுத்துக்கொள்ளும் மண்ணின் வளத்துக்கு ஏற்ப கதைகளை படிக்க தெரிந்தவர்கள் சிறந்த இயக்குனர்கள் என்ற அளவில் கருவேலமர வளர்ப்பு தொடங்கி வட இந்தியர் வரவு தொட்டு, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வு பாராட்டும் சட்ட மேலாண்மை என்று முதல் படத்திலேயே இந்த நாட்டின் சகல பிரச்சினைகளையும் தொட்டு கதை சொல்லியிருக்கும் விருமாண்டி சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இணைகிறார்.
படத்தின் நீளம் வழக்கமான சினிமா விரும்பிகளுக்கு ஒரு குறையாக இருக்கலாம் ஆனால் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகைகள் கூட இரண்டு கால செய்தியாக மட்டுமே பார்க்கும் ஒரு மாவட்ட பிரச்சனைகளை வாழ்க்கையாக சொல்வதற்கு மூன்று மணி நேரம் அதிகம் இல்லை என்றே தோன்றுகிறது.
க பெ ரணசிங்கம் – பெண்சிங்கம் கொண்ட ரணம்..!