July 17, 2025
  • July 17, 2025
Breaking News
July 17, 2025

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

By 0 28 Views

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம். 

எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் .

நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார்.

கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது. 

இவர்களின் நண்பர்கள் டீமில் மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு கனவு, ஒரு எதிர்பார்ப்பு என்று இருக்க எல்லோருடைய பொது பிரச்சினையாகவும் பணம் இருக்கிறது. 

இன்னொரு பக்கம் ஆளுங் கட்சி அரசியல்வாதியான வேலராமமூர்த்தி தொகுதி மக்களுக்கு தேர்தலுக்காகக் கையூட்டு கொடுப்பதற்கான கோடிக் கணக்கான ரூபாய்களைக் கைமாற்றும் பொறுப்பை அவரது உதவியாளரான காளி வெங்கட்டிடம் ஒப்படைக்கிறார்.

இந்நிலையில் காளி வெங்கட்டின் மகளுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்க மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே அவள் உயிர் பிழைக்க முடியும் என்று இருக்க, அதற்கு சில லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. “பைசா தர முடியாது…” என்று வேலராமமூர்த்தி சொல்லிவிடவே, அவர் தன்னிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தில் சில கோடிகளை கையாடல் செய்து விடுகிறார் காளி. 

இதனால் கோபமடைந்த வேலராமமூர்த்தி அவரையும், அவரது மனைவியையும் தீர்த்துக்கட்ட… அந்த பதுக்கப்பட்ட பணம் பற்றிய உண்மைகளை இந்த நண்பர்களிடம் சந்தர்ப்ப வசத்தில் சொல்லிவிட்டுச் சாகிறார் காளி. 

அந்தப் பணத்தை எடுத்து காளி வெங்கட்டின் குழந்தையைக் காப்பாற்ற முடிவு எடுக்கும் நண்பர்கள் அதை நோக்கி பயணப்படுகிறார்கள். இந்த விஷயம் செல்போனில் பேசப்படும் போது கிராஸ்டாக்கில் அறிந்து கொள்ளும் முனிஷ் காந்த் ராமதாஸும், யாசினும் பின்தொடர்கிறார்கள். 

பணம் வைக்கப்பட்டிருக்கும் பங்களாவில் பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. அத்துடன் அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொலையாக… மறைத்து வைக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்ற முடிந்ததா..? அது குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவியதா? அங்கிருக்கும் ஆவியின் தேவைதான் என்ன..? என்பது போன்ற கேள்விகளுக்கு மீதிப் படம் பதிலாக அமைகிறது. 

நடிப்பில் விஜய் ஆண்டனிக்கு சரியான டஃப் கொடுப்பவராக இருக்கிறார் தமன். அந்த முகத்தில் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் வர வேண்டுமே..? வசனம் பேசும்போது வாய் அசைவதைத் தவிர வேறு அவர் முகத்தில் எந்த அசைவும் இல்லை. 

மால்வி மல்கோத்ராவுக்கு தூங்கினால் போதும்… உடனே கனவில் பேய்கள் வந்து ஆட்டம் போடும்… போகப் போக நிஜத்திலேயே பேய்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்க… சதா அழுது கொண்டே வருவதில் ‘ மால்வி அழுகோத்ரா’ ஆகிறார் அவர்.

மற்ற நண்பர்கள், நண்பி எல்லோரும் தங்களால் என்ன முடியுமோ அதைச் செய்து இருக்கிறார்கள்.

வேலராமமூர்த்தி தன் பாணியில் கர்ஜித்துக்கொண்டும், காளி வெங்கட் உணர்ச்சி ததும்ப நெகிழ்ச்சியுடனும் வருகிறார்கள்.

ஒரு தேர்ந்த இதய நோய் மருத்துவரும், மனிதாபியுமான தலைவாசல் விஜய்யின் தலையைக் கொய்து தலையில்லா விஜய் ஆக்கிக் கொல்வது ஆவியே ஆனாலும் அநியாயம்.

ஒன்றுடன் ஒன்று ஒட்டாத கதை அமைப்பு, நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்க மறுக்கிறது.

பேயும் வில்லனும் அடிக்கும் கொட்டம் போதாது என்று கூடவே அந்த பங்களாவில் ஒரு நாயும் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த கிராபிக்ஸ் நாயால் மனித வேகத்துக்கு ஓட முடியவில்லை என்பது பரிதாபம். 

கடைசியில் வில்லனை சரியாகக் கண்டுபிடித்துக் கொல்லும் அந்த நாய் ஹீரோவிடம் வந்ததும் பம்மி பணிகிறது. கூடவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தையும் அடையாளம் காட்டுகிறது. 

கேஜியின் ஒளிப்பதிவு இரவைக் கூட பகல் வெளிச்சத்தில் (!) பளிச்சென்று காட்டுகிறது. 

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், சாம் சி எஸ் க்கு போட்டியாக பின்னணி இசையில் அடித்து நொறுக்குகிறார்.

இந்த ஒரு பாகத்தையே நம்மால் தாங்க முடியவில்லை என்கிற அளவில் இதன் அடுத்த பாகத்துக்கும் ‘ லீட் ‘ கொடுத்து முடிக்கிறார் இயக்குனர். 

இந்தப் பட புரமோஷனில் ஓமன் என்ற புகழ்பெற்ற ஆங்கில (ஆவி)ப் படத்தின் மறு உருவாக்கம் இது என்றார்கள்.

அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். பார்த்தவர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை.

ஏனென்றால் அந்தப் படம்தான் இது என்று தெரிவதற்கான சாத்தியம் எதுவும் இல்லை.

ஜென்ம நட்சத்திரம் –  நிஜப் பேயும், பணப் பேயும் ..!

– வேணுஜி