எஸெஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த படம் ‘கூழாங்கல்’.
சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கிய இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, அவரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்தில், அம்மு அபிராமி, சேத்தன், காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஸ்ரீ கிருஷ்ண தயாள், சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில், கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், பார்த்தா எம்.ஏ படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவர இருப்பதையொட்டி படத்தின் இயக்குனர் பாரி இளவழகன், தயாரிப்பாளர்கள் சாய் வெங்கடேசன் ,சாய் தேவானந்த் மற்றும் நடிகர் சேத்தன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது இயக்குனர் பாரி இளவழகன் கூறியதாவது:-
“இது தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றிய படம். நானும் திருவண்ணாமலையில் தெருக்கூத்தில் பயின்றவன் என்பதால் அந்த கலையை பற்றிய நுட்பங்கள் எனக்கு நன்றாக தெரியும் அதை வைத்து இந்த ஸ்கிரிப்ட்டை உருவாக்கி இருக்கிறேன்.
சினிமாக்களில் பெரும்பாலும் தெருக்கூத்து பற்றி கதைகள் வரும்போது அந்த கலை அழியும் நிலையில் இருப்பதாகவும் அந்த கலைஞர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை அந்த கலைஞர்கள் நன்றாகவும் தெருக்கூத்து சிறப்பாகவும்தான் நடந்து வருகிறது.
தெருக்கூத்தில் முக்கிய பிரச்சனை என்றால் ஆண்கள்தான் பெண் வேடம் கட்டி நடிப்பதுதான். அப்படி பெண் வேடமிட்டு நடிக்கும் ஒரு வாலிபனைப் பற்றிய கதை இது.
அவரை இந்த உலகம் எப்படி பார்க்கிறது? எப்படி எல்லாம் ஒதுக்குகிறது ? அவரது மன நிலை என்ன பாடு படுகிறது ? என்பதை கிராமத்து பாணியில் சொல்லியிருக்கிறோம். தெருக்கூத்து கலையுடன் காதல், குடும்பம், கலந்து கொடுத்திருப்பதோடு இறுதியில் பெண் வேடமிட்டவன் எப்படி தனது ஆளுமையை அடைகிறான் என்பதை உணர்ச்சியோடு சொல்லி இருக்கிறோம்.
இப்படத்துக்கு இசை அமைக்க இளையராஜாவிடம் படத்தின் கதையை 8 நிமிட பைலட்டாக எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்ததுமே என படத்துக்கு இசை அமைக்க அவர் ஒத்துக்கொண்டார்.
படத்தின் கிளைமாக்சில் வரும் உணர்ச்சி மிக்க பாடலுக்காக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை கிராமத்தில் இருந்து வரவழைத்து அவர் உருவாகி தந்தார். படத்தில் அது ஹை லைட்டாக இருக்கும்.
தெருக்கூத்து கலையில் அதில் ஈடுபடும் ஒவ்வொரு குழுவையும் ஜமா என்றுதான் அழைப்பார்கள் அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன்..!” என்றார்‘‘
‘ஜமா’ய்ங்க..!
– வேணுஜி