சினிமாவுக்கு அடுத்ததாக கலையுலகின் எதிர்காலமாகக் கருதப்படும் வெப் சீரீஸ் தயாரிப்பில் இப்போது முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் பெருமளவில் அக்கறை காட்டி வருகின்றன.
அந்த வரிசையில் ‘சோனி லிவ்’ (Sony LIV) மற்றும் ‘அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்’ இணைந்து வழங்கும் ‘இரு துருவம்’ வெப் சிரீஸின் அறிமுக விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.
அதில் சோனி பிக்சர்ஸ் இந்தியா டிஜிட்டல் பிரிவின் வர்த்தகத் தலைவர் உதய் சோதி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா கூட்டாண்மைகள் தலைவர் அமோக் துசாத், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தலைமை செயல் அலுவலர் சமீர் நாயர் பங்கேற்ற விழாவில் ‘இரு துருவம்’ வெப்சீரீஸ் நாயகன் நந்தா, நாயகி அபிராமி அய்யர், செபாஸ்டியன், அனீஷா, இயக்குநர் எம்.குமரன் கலந்து கொண்டனர்.
இது ஒரு துப்பறியும் தொடர். நகரில் ஒரு இரவில் அடுத்தடுத்த கொலைகள் நடக்க அதைத் துப்பறிய இறங்கும் போலீஸ் அதிகாரி விக்டருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. அத்துடன் அவரது மனைவியும் காணாமல் போக அடுத்தடுத்த நிகழ்வுகள் நம்மை இருக்கையில் கட்டிப் போடுமாம்.
இது பற்றி நந்தா பேசுகையில், “ஈரம் படத்துக்குப் பிறகு எனக்குப் பெயர் சொல்லும் படைப்பாக இது இருக்கும். இந்தக் கதையை குமரன் எனக்குச் சொன்னபோதே இதைப் படமாகப் பண்ணலாம். என்றேன். ஆனால், அவர் வெப் சீரீஸ் செய்வதில் உறுதியாக நின்றார்.
குறிப்பாக என் கேரக்டர் பற்றிய நடைமுறையை அவர் ஸ்கிரிப்டில் இடது பக்கம் குறிப்பிட்டிருந்தது என்னைப் பெரிதும் கவர்ந்தது. அத்னால், என்னால் என் பாத்திரத்தை வடிவமைத்துக்கொள்ள முடிந்தது..!” என்றார்.
பத்து பாகங்கள் கொண்ட இந்த ‘இரு துருவம்’ வெப் தொடர் பத்தாது என்று சொல்கிற அளவில் அமைந்தால் சரி..!