ஏறத்தாழ 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின் பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார் இளையராஜா.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற நேர்ந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இளையராஜா, தான் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்திய அறையில் ஒரு மணி நேரம் தியானம் செய்யவும், அங்கேயிருக்கும் தன்னுடைய பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லவும் பிரசாத் நிர்வாகம் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதன் விளைவாக ஏதேனும் ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் இளையராஜா தன்னுடைய அறையைப் பயன்படுத்திக் கொள்ளவும், தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்தது. அதன் விளைவாக இன்று பிரசாத்துக்கு செல்ல முடிவெடுத்தார் இளையராஜா.
முன்னதாக இளையராஜாவின் வழக்கறிஞர்கள் இன்று காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்து பார்த்தபோது பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்தி வந்த தனிப்பட்ட அறையையே பிரசாத் நிர்வாகம் இடித்துவிட்டது தெரிய வந்தது. அந்த அறையில் இருந்த பொருட்களை வேறொரு இடத்தில் வைத்திருந்தார்களாம்.
இது பற்றி இளையராஜாவுக்கு அவரது வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தபோது அவர் மிகவும் மனமுடைந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு வராமலேயே இருந்துவிட்டார்.
வழக்கறிஞர்கள் மட்டும் இளையராஜாவுக்குச் சொந்தமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்.
பிரசாத் ஸ்டுடியோ போன்ற பெரும் நிறுவனம் இளையராஜா போன்ற மேதைகளை இப்படியா பழி தீர்ப்பது என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக்.