இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது. ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…
‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே நடக்கிறது. அதுவும் அடக்குமுறைக்குட்பட்ட ஏழைகளுக்கு உதவுவதே அவரது தலையாய பணியாக இருக்கிறது.
ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள்…
தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவோரின் முகத்தைக் கூடப் பார்க்காமல் குனிந்தே பழக்கப்பட்டு வட்ட அடிமை மக்களுக்காக மல்யுத்தத்தில் ஜெயித்து
அதற்குப் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்கப்படும் போது “உங்களுக்கு கால்கள் மட்டுமல்ல, தலைகளும் இருக்கின்றன என்று இந்த அடிமைகள் நிமிர்ந்து பார்ப்பதற்கு உரிமை கொடுங்கள்..!” என்று கேட்கிறார் பவன். இதைவிட அதிகமாக ஒரு ஹீரோ என்ன கேட்டு விட முடியும்..?
17 ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதையில் அப்போதைய நாகரிகப்படி பவன் இருக்கிறாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. இப்போது எப்படி பார்க்கிறோமோ அதே கெட்டப்பில் கொஞ்சம் உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டு வருகிறார்
.
ஆனால், அவர் கையில் எடுத்திருக்கும் அரசியல் அஸ்திரமான சனாதன தர்மத்தை திரைப்படம் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க இதுவே சிறந்த உத்தி என்று தோன்றுகிறது. அதனாலேயே வேறு கெட்டப்பில் வந்து யாரோ போல் தோற்றமளிக்காமல் அவர் அவராகவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஆனால், அவுரங்கசீப்புக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் நடக்கும் கதையானாலும், அவரேதான் வில்லனாக ஆனாலும்… ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் விரோதிகளாக காட்டாமல் பொதுவான எதிரியாக அவர் அவுரங்கசீப்பை வைத்துக் கொண்டிருப்பதில் திரைக்கதை மிகுந்த கவனமாக கையாளப்பட்டிருக்கிறது.
பவன் கல்யாண் உடன் வரும் உதவியாளர்களில் இருவர் இஸ்லாமியர் என்பதே இதற்குச் சான்று.
சின்னதும் பெருசுமான சுவாரஸ்யங்கள் முதல் பாதியில் முட்டிக்கொண்டு வந்து நிற்க, இந்தக் கதையின் நோக்கம் மொகலாயர் அடித்துக் கொண்டு சென்ற கோகினூர் வைரத்தை அவுரங்கசீப்பிடம் இருந்து திரும்பப் பெற்று வரும் வேலை வீரமல்லுவின் வீரத்துக்கு சவாலாக அமைகிறது.
அதை அவரால் பெற முடிந்ததா என்பதை அடுத்த பாகத்தில்தான் நாம் பார்க்க வேண்டும் ஏனென்றால், அவர் அவுரங்கசீப்புடன் மோத ஆரம்பிப்பதோடு இந்த பாகம் முற்றுப்பெறுகிறது.
அது என்னவோ பாபி தியோலை வில்லனாக்கிப் பார்ப்பதில் இந்திய சினிமா ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால் அவர் முகத்தைப் பார்த்தாலோ அவ்வளவு கெட்டவராக நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை.
நாயகி நிதி அகர்வாலின் பங்கும் படத்தில் சிறப்பாக இருக்கிறது. நியாயப்படி ஆதிக்க சக்திகளுக்கு நேர்ந்துவிட்ட அடிமைப் பெண்களிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட நிதி அகர்வால், அந்த நிதி முதலீட்டாளர் கைபடும் முன்னரே பவன் கல்யாணால் மீட்கப்படுகிறார்.
ஆனால் அவருக்கும் டேக்கா கொடுத்து நிதி அகர்வால் செய்கிற ஒரு காரியம் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதுவும் பாதிக்கப்பட்டவர்களின் நிதி வசதிக்காகதான் என்பது கூடுதல் சிறப்பு.
சத்யராஜ் மற்றும் நாசர் கவனிக்கத்தக்க வேடங்களில் வந்து போகிறார்கள் . சமீபத்தில் காலமான கோட்டா சீனிவாசராகவும் தனது கடைசி கோட்டாவை இதில் நிறைவு செய்து இருக்கிறார்.
இவர்களை தவிர தனிகபரணி ஈஸ்வரி ராவ் முரளி சர்மா உள்ளிட்டு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளே மின்னுகிறார்கள்.
தர்மத்தை தாண்டியும் படம் வெகு மக்களால் ரசிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே முதல் பாதையில் கதைக்கு தேவை இலலாவிட்டாலும்
நிறைய சாகசங்களை பவன் கல்யாண் செய்கிறார். அதில் அவரது ரசிகர்களுக்கு… குறிப்பாக தெலுங்கு ரசிகர்களுக்கு திருப்தி கிடைக்கும்.
அதைத் தாண்டி ஒரு கதையாக இந்தப் படத்தில் நமக்கு எழும் பல கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில்தான் விடை கிடைக்கும் போலிருக்கிறது.
ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியிருக்கும் இந்தப் படம் பல இடங்களில் பிரபாஸ் படத்துக்கு எங்கள் படம் சளைத்ததில்லை என்கிற அளவுகோலுடன் படைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.
அந்த அளவுக்கு கலை இயக்குனர் அற்புதமாக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் சிஜி அளவில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
படம் முழுதும் இசைத்திருக்கும் எம் எம் கீரவாணி முதல் பாதியில் பெருமளவு படத்தை தூக்கி நிறுத்துகிறார். ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறாரோ
என்கிற யோசனை நமக்கு வந்து விடுகிறது.
பவன் கல்யாண் சாகசங்களுக்கு துணை போயிருக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு.
உண்மையும் கற்பனையுமாக கலந்து க்ரிஷ் ஜாகர்ல முடி எழுதியிருக்கும் இந்தக் கதை முழுக்க முழுக்க பவன் கல்யாண் மீதிருக்கும் அரசியல் இமேஜை அடிப்படையாக வைத்து அவரை இன்னும் ‘ பவர் கல்யாண் ‘ ஆக்குவதற்கு என்று உருவாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்றே கொள்ளலாம்.
ஹரிஹர வீரமல்லு – ஜன (சேனா) நாயகன்..!
– வேணுஜி
Related