April 26, 2024
  • April 26, 2024
Breaking News
July 14, 2019

கொரில்லா திரைப்பட விமர்சனம்

By 0 807 Views

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது.

அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது.

வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார். நெரிசலான பஸ்ஸில் ஏறி பெரிய நோட்டாகக் கொடுத்து டிக்கெட் வாங்கித்தரச் சொல்லி பணம் தருபவர்களிடம் அந்தப் பணத்தைக் கண்டக்டரிடம் கடத்தாமல் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ‘எஸ்’ ஆகி விடுகிறார்.

மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் சாக்கில் அங்கேயும் ஆளுக்கேற்றவாறு மருந்து கொடுத்து ஆட்டையைப் போடுகிறார். அந்த அனுபவத்தில் இன்னொரு பக்கம் டாக்டராகவும் மாறி வசூல் ராஜாவாகவும் இருக்கிறார்.

ஆட்குறைப்பு காரணமாக வேலையிழந்த சதீஷ், ஹீரோ கனவிலிருக்கும் விவேக் பிரசன்னா, விவசாயம் செய்ய வழியில்லாமல் தற்கொலை முடிவிலிருக்கும் மதன் குமார் இவர்களுடன் ஜீவாவும் இணைந்து எல்லோரின் பிரச்சினைக்கும் முடிவைக் காண ஒரு வங்கிக் கொள்ளையைத் திட்டமிடுகிறார். அது முடிந்ததா என்ற கேள்விக்கு பதிலாக எதிர்பாராத முடிவு.

சீரியஸ் படமோ, சிரிப்புப் படமோ எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஜீவா, இதையும் அப்படி இயல்பாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வேலைகளில் திருட்டு முழியுடன் காரியம் ஆற்றுபவர், எதிர்பாராமல் சமூகக் காவலனாக மாற சந்தர்ப்பம் கிடைத்த வேளையில் தனக்காக அதே மக்கள் ஆதரவு தருவதை எதிர்கொண்டு மனம் மாறும் கட்டத்தில் அந்த மகிழ்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கில் பரபரப்பாக அறிமுகமான ஷாலினி பாண்டே இதில் நாயகியானாலும் அவருக்கு எந்தப் பரபரப்பும் இல்லாத வேடம். பாதி நேரம் அவரை ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே நகைச்சுவைப் படமென்பதால் கிடைத்த கேப்பில் எல்லாம் சிரிப்பு வெடிகளைச் செருகுகிறார் சதீஷ். தன் உடலில் மாட்டப்பட்டிருப்பது நிஜ வெடிகுண்டு என்று உணரும்போது கூட சீரியஸ் ஆகாமல் ஜோக்கடிக்கிறார்.

படத்துக்குப் படம் இடம்பெறும் விவேக் பிரசன்னா இதிலும் இடம் பெற்றிருக்கிறார். இந்த அணியில் மதன் குமார் வேடம் மட்டுமே சீரியஸானது. அவரும் நன்றாக நடித்திருக்கிறார். உண்மையில் ஹீரோவுக்கு அடுத்து… அல்லது ஹீரோவை ஹீரோ ஆக்குவதே இவர் கேரக்டர்தான்.

இந்தக் கதைக்குள் திடீரென்று நுழைகிறார் யோகிபாபு. பாதிப் படத்துக்கு மேல் கதை வங்கிக்குள்ளேயே முடங்கி விடுவதால் அதைச் சரிக்கட்ட யோகிபாபுவும், சிம்பன்ஸியும் பெரிதளவில் உதவுகிறார்கள். அவர்களுக்கிடையேயான ‘அன்டர்ஸ்டேன்டிங்’கை வெகுஜனம் நன்றாகவே ரசிக்கும்.

கொள்ளையர்களைப் பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக ராதாரவி. நின்ற இடத்திலேயே நடிக்கும் வேடம் அவருக்கு.

பல இடங்களில் நடப்பு அரசியலையும், அரசியல்வாதிகளையும் நக்கலடிப்பதை ரசிகர்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள். அந்த தெர்மோகால் காமெடியும் சாகாவரம் பெற்றது.

இருந்தும் மிகவும் சீரியஸான விவசாயக் கடன் தள்ளுபடியை ‘ஜஸ்ட் லைக் தட்’ இதில் நிறைவேற்றியிருப்பது ஆகப்பெரும் காமெடியாகியிருக்கிறது.

ஆனால், சீரியஸாகவே நினைத்துப் பார்த்தால் விவசாயிகள் பிரச்சினையை மத்திய, மாநில அரசுகளும் காமெடியாகத்தானே எடுத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையும் உறுத்தாமலில்லை.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும், ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் படத்துக்குத் தோள் கொடுத்திருக்கின்றன.

கொரில்லா – நோ லாஜிக்… ஒன்லி காமிக்..!