May 5, 2024
  • May 5, 2024
Breaking News
April 26, 2024

ஒரு நொடி திரைப்பட விமர்சனம்

By 0 323 Views

ஒரு நொடியில் நாம் எடுக்கும் அவசர முடிவு நன்மையாகவோ, தீமையாகவோ நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற உண்மையை கேப்ஸ்யூலில் வைத்து ஒரு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பி. மணிவர்மன்.

சஸ்பென்ஸ் திரில்லர் வகையறாவில் மர்டர் மிஸ்டரியையும் கலந்து அதற்கு ஒரு கேஸ் ஹிஸ்டரியாகத் திரைக்கதையும் எழுதி இருக்கிறார் அவர்.

சுற்றி வளைத்தெல்லாம் மூக்கைத் தொடாமல் முதல் காட்சியிலேயே நேரடியாக பரபரப்புக்குள் வந்துவிடுகிறது திரைக்கதை. காவல் நிலையம் வரும் ஸ்ரீ ரஞ்சனி தன் கணவர் எம்.எஸ் பாஸ்கரைக் காலையில் இருந்து காணவில்லை என்று ஒரு புகார் கொடுக்கிறார்.

“யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா..?” என்கிற கேள்விக்கு அவர் கந்து வட்டி வேல. ராமமூர்த்தியை அடையாளம் காட்டும்போது பரபரப்பின் பிடி இருகுகிறது. அந்தக் கணமே ஆக்ஷனில் இறங்கும் இன்ஸ்பெக்டர் தமன் குமார் இந்த வழக்கை எப்படி எதிர்கொண்டார் – எதைக் கண்டுபிடித்தார் என்பதெல்லாம் அடுத்த இரண்டு மணி நேர விசாரணையில் இன்ச் பை இன்ச்சாக சொல்லப்படுகிறது. 

நல்ல உயரம், சராசரி ஹீரோவுக்குரிய தோற்றம் எல்லாம் இருந்தும் தமன் குமாரால் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக ஏன் வலம் வர முடியவில்லை என்பது பெரிய கேள்வி. அதே கேள்வி இன்னொரு முறை இந்தப் படத்தை பார்க்கும் போதும் நமக்குள் எழுகிறது. 

அலட்டிக் கொள்ளாமல் எதையும் இலகுவாக ஆனால் ஆழமாக அணுகும் அவரது பக்குவம் ரசிக்க வைக்கிறது. ஆனால் அங்கங்கே இன்னும் கொஞ்சம் உப்பும், உரைப்பும் காட்டி இருக்கலாம் அவர். 

படத்தில் கொஞ்ச நேரம்தான் வருகிறார் எம். எஸ்.பாஸ்கர். அதற்குப்பின் காணாமல் போகிறவர் என்ன ஆனார் என்பதுதான் மர்ம முடிச்சு. அந்தக் கொஞ்ச நேரம் வந்து போனதிலேயே படம் முழுதும் அவர் இருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுவது ஆச்சரியம்தான். 

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக வரும் ஸ்ரீ ரஞ்சனியும் தனக்கு அளிக்கப்பட்ட குறைவான பங்கைக்  குறையின்றிச் செய்திருக்கிறார்.

ஆனால் அத்தனைப் பரபரப்புடன் ஆரம்பிக்கும் கதை, நகைக் கடையில் வேலை செய்யும் நாயகி நிகிதாவின் மரணம் தெரிய வந்தவுடன் பாதை மாறுகிறது. 

அதற்குப்பின் பல காட்சிகளுக்கு இந்தக் கதையே ஓடிக்கொண்டிருப்பதால் எம்.எஸ்.பாஸ்கர் என்னதான் ஆனார் என்கிற நமது கேள்வி, ஸ்ரீரஞ்சனியின் கேள்வியைப்  போலவே காணாமல் போகிறது. 

விரைப்பு காட்டும் வேலராமமூர்த்தி, இதில் வரும் முரட்டு வேடத்தையும் நல்லி எலும்பைப் போல் மென்று துப்பி விடுகிறார். என்னதான் அவர் போலீசுக்கு பயப்படாத செல்வாக்குடையவர் என்றாலும் ரகசியமாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தி விசாரணைக் கைதியாக்கப்பட்ட பிறகும் எம்.எஸ்.பாஸ்கரை தான் சந்திக்கவில்லை என்ற ஒரு வரி உண்மையைச் சொல்லாமல் தன் பிரதாபங்களை மட்டுமே ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்பது புரியவில்லை.

அதேபோல் ஏதோ செய்து விடப் போகிறார் என்று பயமுறுத்தி அறிமுகமாகும் எம்எல்ஏ பழ. கருப்பையாவும் ஒரு கட்டத்தில் சமயம் வரும்போது செய்வோம் என்று ஒன்றுமே செய்யாமல் காணாமல் போய்விடுகிறார். 

நிகிதாவின் அழகுக்கு அவரை இரு இளைஞர்கள் ‘உயிருக்கு உயிராய்…’ காதலிக்கிறார்கள் என்பதை நம்பலாம்தான்.

அவரது அப்பா தேவைக்கும், அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர் கொஞ்சம் மீட்டருக்கு மேலேயும் நடித்திருக்கிறார்கள்.

முடி திருத்தும் கலைஞராக வரும் விக்னேஷ் ஆதித்யா நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார்.

சஞ்சய் மாணிக்கம் இசையில் சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் எழுதியிருக்கும் பாடல்கள் படத்தின் உணர்வைப் பிரதி எடுத்திருக்கின்றன. 

கே.ஜி.ரத்தீஷின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக இருக்கிறது.

ஒரே காட்சியும், உரையாடல்களும் வேறு வேறு பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படும் போது அவற்றை வெவ்வேறு கோணத்தில் காட்டி இருக்கும் உத்தியில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் “பலே..!” சொல்ல வைத்திருக்கிறார்கள்.

இவர்தான் தவறு செய்திருப்பார் என்று ஒருவரை நம்ப வைத்துவிட்டு அவர் இல்லை இவர்தான் என்று நாம் நம்பாமல் இருக்கும் இன்னொரு பாத்திரத்தைக் குற்றவாளியாக்குவதுதான் இது போன்ற படங்களில் அடிப்படை உத்தி. 

இதிலும் அதேதான் என்றாலும், லாஜிக் விஷயங்களில் இன்னும் மெனக்கெட்டு யோசித்து இருந்தால் நம்பகத்தன்மை மிகுந்து இந்த சீசனின் சிறந்த படமாக இது இருந்திருக்கும். 

குறிப்பாகக் கொலை நடந்த இடத்துக்கு மோப்பநாயை வரவழைக்கும் வழக்கமான நடைமுறை இதில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலே ஒரு சில சதுர மீட்டருக்குள் அத்தனை மர்ம முடிச்சுகளும் சட்டென்று அவிழ்ந்திருக்கும்.

அத்துடன் இன்ஸ்பெக்டர் பொறுப்பு மட்டுமே காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பு என்பதைப் போல கொலை வழக்கில் கூட தன் மேல் அதிகாரிகளுக்கு எந்த விதமான ரிப்போர்ட்டும் செய்யாமல் தமன் குமாரே தன்னிச்சையாக முடிவெடுத்து, எந்த அழுத்தமும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் ரொம்ப யோசிக்காமல் மேலோட்டமாகப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியும்.

லாஜிக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தொய்வில்லாத பரபரப்பில்…

ஒரு நொடி – சர வெடி..!

– வேணுஜி