“பெரிதாக யோசி…” என்ற பதத்துக்குப் பொருத்தமாக படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் ஷங்கர், தெலுங்கு ஸ்டார் ராம்சரனுடன் இணைந்து பான் இந்திய படமாக உருவாக்கியிரக்கும் இந்தப் படம் அரசியலையும், ஆட்சியமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது.
ஆந்திராவை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என்று இரண்டு மகன்கள் இருக்க, அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியத்தில் அவசரக் கூட்டம் போட்டு எல்லோரையும் நேர்மையாக நடந்து மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
அப்படி நடக்காதவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்க, எல்லா அமைச்சர்களும் திடுக்கிட, அவர்களுள் ஒரு அமைச்சராக இருக்கும் எஸ் ஜே சூர்யா மட்டும் தடுமாறாமல் வெளியே தெரியாமல் ஊழல்களைச் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அங்கே கலெக்டராக பொறுப்பேற்கும் ராம்சரண் தன் பங்குக்கு ஊழல்வாதிகளை அதிரடி வேட்டையாட, அதில் எஸ்ஜே சூர்யாவின் வசம் இருக்கும் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் தொழிலும் சிக்குகிறது. இதில் ராம் சரணுக்கும் எஸ.ஜே. சூர்யாவுக்கும் மோதல் உருவாகி முற்றுகிறது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் வயோதிகப் பெண்மணியாக இருக்கும் அஞ்சலியை சந்திக்கும் முதல்வர் ஶ்ரீகாந்த் கலக்கமடைந்து நோய்வாய்ப்படுகிறார். ஸ்ரீகாந்துக்குப் பின் , தானே முதல்வர் ஆசனத்தில் அமர்வதுடன் நிரந்தரமான முதல்வராக இருக்க வேண்டும் என்கிற வெறி கொண்ட எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து காய் நகர்த்தி முதல்வர் பதவிக்குத் தயாராகிறார்.
ஆனால், பதவியேற்பதற்கு முன் இறந்து போன ஸ்ரீகாந்தின் ஆத்ம நண்பரான சமுத்திரகனி ஒரு வீடியோவை வெளியிடுகிறார். அதில் அடுத்து ஆந்திரத்தின் முதல்வராக ராம் சரண்தான் அடுத்து வரவேண்டும் என்கிற தன் ஆசையை தெரிவித்து ஸ்ரீகாந்த் தெரிவித்து இருக்க, எஸ் ஜே சூர்யாவின் ஆசை தவிடுபொடி ஆகிறது.
முதல்வரானதும் முதல் வேலையாக ராம்சரணைத் தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த சம்பவம் பேரிடியாக… மேலும் இருவருக்குமான மோதல் பெரிதாக, யார் யாரை வென்றார்கள் யார் முதல்வரானார்கள் என்பதெல்லாம் பரபரப்பான பின் பாதி.
முதலில் ஐபிஎஸ், பிறகு ஐஏஎஸ் அதன் பிறகு முதல்வர் பதவிக்கான தேர்வு என்று ஓவர் டோஸான பொறுப்புகளை நாயகனாக ராம் சரண் தோளில் சுமந்து இருக்கிறார். ஆனால் அத்தனைக்கும் நியாயம் செய்கிறது அவருடைய மாறுபட்ட உடல் மொழியும், நடிப்பும்.
மட்டுமல்லாது தன் இளவயது கெட்டப்பில் கலக்கி இருக்கும் ராம்சரண், ஃப்ளாஷ் பேக்கில், தந்தையாக போராளி வேடத்தில் வரும் கெட்டப்பும் மிரட்டலாக இருக்கிறது.
ஆரம்பத்தில் வரும் அந்த ரயில் சண்டைக் காட்சியும், கிளைமாக்ஸ்- இல் வரும் ஓட்டு எண்ணிக்கை பூத் சண்டைக் காட்சியும் அதிரி புதிரியாக இருக்கிறது.
இவ்வளவு திரை அதிகம் ராம்சரனுக்கு இருந்தும் தன் நடிப்பில் அவருக்கு இணையான வேடத்தை ஏற்றிருக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. அதிலும் இதுவரை நாம் பார்க்காத அளவில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் அவர் பண்ணுகிற அலப்பறைகளில் தியேட்டர் அதிர்கிறது.
நாயகி கியாரா அத்வானிக்கு பெரிய வேலை இல்லை. பாடல் காட்சிகளில் மட்டும் கிளாமர் அத்வானியாக குளிர்ச்சி சேர்க்கிறார்.
ஐபிஎஸ்- க்கு படித்ததால் ராம் சரணுடைய காதல் தேவை இல்லை என்று அவரை விட்டுப் பிரிவது வலுவாக இல்லை.
முதல்வரின் மூத்த மகனாக வரும் ஜெயராமின் அலப்பறைக்கும் அளவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் மூரக்கத்தனம் தெரிந்து அவர் அமைதியாகி விடுவதில் ஆஃப் ஆகி விடுகிறார்.
சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும் வலுவானது., சைடு வாங்கும் சுனில் செய்கைகள் நம்ப முடியாதவாறு இருந்தாலும் அவரது நகைச்சுவை நடிப்பில் சிரிக்க முடிகிறது.
எஸ் ஜே சூர்யாவின் கையாளாக வரும் நவீன் சந்திராவும் கவனிக்க வைக்கிறார்.
திரு வின் ஒளிப்பதிவுக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம். அதிலும் அந்த கடைசிப் பாடல் காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம்.
ஷங்கருக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்குமான கெமிஸ்ட்ரி இதுவரை வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருக்க, இதில் ரஹ்மான் மிஸ் ஆனது கொஞ்சம் பலவீனம்தான். அந்தக் குறையை தன்னால் ஆன அளவுக்கு தீர்க்க முயன்று இரக்கிறார் இசையமைப்பாளர் எஸ். தமன்.
படத்தொகுப்பாளர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவருக்கும்தான் இரவு பகலாக வேலை இருந்திருக்கும். எவ்வளவு வெட்டியும் மூன்று மணி நேரத்துக்குக் குறைந்து அவர்களால் குறைக்க முடியவில்லை.
இந்தப் படத்தின் இயக்குனர் பெயரை போடாவிட்டாலும் கண்டுபிடித்து விடலாம் ஷங்கர் படம் தான் இது என்று. அவரது இலக்கண குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.
இது ஆந்திரா பக்கத்து கதை என்பதால் தமிழ்நாட்டு அரசியல் குடும்ப சாயலில் உள்ள ஒரு கதையை தைரியமாக எடுத்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யாவின் அமைச்சர் பதவிக்கு ராம்சரண் ஆப்பு வைக்க நினைக்க, பதிலுக்கு எஸ் ஜே சூர்யா அவர் மீதான கரும்புள்ளி ஏற்படுத்த, தொடர்ந்து முதல்வராக எஸ் ஜே சூர்யா ரெடியாக, தானே அறியாமல் ராம்சரண் அதற்கு முட்டுக்கட்டையாக… எதிர்பாராத விதமாக முதல்வர் பதவியை ராம்சரண் விட்டுக் கொடுக்க, ஆனாலும் எஸ் ஜே சூர்யா ராம்சரணை பழி தீர்க்க… என்கிற நீயா நானா போராட்டத்தில் திரைக்கதையில் தீ பற்றிக்கொள்கிறது.
இயல்பிலேயே போராளியான அஞ்சலியின் முடிவு ஏற்புடையதாக இல்லை.
லாஜிக்குகள் நிறைய மீறி இருந்தாலும், பரபரப்பான திரைக்கதையில் பொய்வில்லாமல் செல்லும் படம், ரசிகர்கள் கொடுத்த பணத்துக்கு பேரதிக விருந்தாக அமைகிறது.
கேம் சேஞ்சர் – மோதினால் டேஞ்சர்..!
– வேணுஜி