‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..?”
அதற்கு பதில் சொன்னார் சந்தோஷ், ‘கஜினிகாந்த்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
“ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி. தெலுங்கில் ஹிட்டான படத்தைத் தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது.
இதன் படப்பிடிப்பில் ஆர்யா கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷாவைப் பொறுத்தவரையில், அவரிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை என்னிடம் கேட்பார். அதைப் படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.
என்னுடைய முதல் இரண்டு படங்களும் ‘அடல்ட் ஹாரர் காமெடி படங்கள்’. குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இதனை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், இன்னொரு பக்கம் தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை பெண் வீட்டார் தேர்வு செய்வார்கள் என்பதையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். கிராமிய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்..!”