இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும் போக்கும்தான்.
அப்படி ஆஹா ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்தான் எமோஜி. மனித மன உணர்வுகளை எப்படி எமோஜிகள் பிரதிபலிக்கின்றனவோ அப்படியே இளைஞர்கள் சிலரின் வாழ்வில் நடைபெறும் சந்தோஷம், துக்கம், காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து கவிதை போல கொடுத்திருக்கிறார் இயக்குனர் சென் எஸ். ரங்கசாமி.
‘மஹத் ராகவேந்திரா’ தான் இந்த படத்தின் நாயகன். சிம்புவின் நண்பராக இருப்பதாலையோ என்னவோ கிட்டத்தட்ட சிம்புவின் பாத்திரம் மாதிரியே இந்த படத்திலும் அவருக்கு பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. வசன மாடுலேஷன் எல்லாம் கூட அப்படியே சிம்பு மாதிரியே.
மஹத் வாழ்க்கையில் குறுக்கே வரும் இரண்டு பெண்களுடனான அவரது காதல்தான் இந்த எமோஜி.
இதனை சினிமா கிளிஷே கொஞ்சம் கூட இல்லாமல் இயல்பான கதை ஓட்டத்துடன் மற்றும் இளமை பொங்கும் அழகியலுடன் கொடுத்திருப்பது திரைப்படம் பார்ப்பதை விட அதிக சுவாரசியத்தைத் தருகிறது.
வழக்கம்போல் ஐடி துறையில் வேலை பார்க்கும் மஹத்துக்கு மானசா சௌத்ரியுடனான நட்பு கிடைக்கிறது. நீச்சல் வீராங்கனையாக இருக்கும் மானசா விளையாட்டு பொருள்கள் விற்கும் டிக்கத்லான் கடையில் வேலை பார்த்து வருகிறார். எல்லோரும் எதிர்பார்ப்பது மாதிரியே மஹத் மானசா நட்பு காதலாகிறது.
எதிர்பார்க்காத வகையில் அந்த காதல் பிரேக் அப்பும் ஆகிறது. இந்நிலையில் மஹத்துக்கு இரண்டாவது காதல் முளைக்கிறது. நன்றாக போய்க் கொண்டிருக்கும் அந்தக் காதலும் விவாகரத்துக்கு வந்து நிற்க… இதன் முடிவு என்ன என்பதுதான் மொத்தக் கதை.
முன்பை விட மஹத் அழகிலும் நடிப்பிலும் மகத்தாக வளர்ந்திருக்கிறார். நடிப்பைக் கொட்ட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல இயல்பாக இயங்கி இருப்பதே நல்ல நடிப்பாகிறது.
அவரது காதலிகளாக வரும் மானசா சௌத்ரியும், தேவிகா சதீஷும் காதல் பிசாசுகள். இந்த இருவரும் எந்த இளைஞன் வாழ்வில் குறிப்பிட்டாலும் இருவரில் ஒருவரை தவிர்த்து இன்னொருவரை காதலிப்பது கடினம். அந்த அளவுக்கு தேவதைகளாக தெரிகிறார்கள் திரையில்.
இவர்கள் இருவரில் தேவிகா சதீஷுக்கு நடிக்கவும் வருகிறது என்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட். அவரது எக்ஸ்பிரஷன்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஹைக்கூ. கூடிய விரைவில் திரையை கட்டி ஆளப்போகிறார் தேவிகா என்பது தெரிகிறது.
வசனங்கள் எழுதப்பட்டனவா அல்லது அவர்களே பாத்திரங்களை உணர்ந்து பேசினார்களா என்கிற அளவில் அவ்வளவு இயல்பாக இருக்கிறது உரையாடலும் அவர்களது நடிப்பும். அதனாலேயே மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கும் தேவிகாவை கைத் தாங்கலாக அழைத்து வந்து படுக்கை அறையில் படுக்க வைக்கும் வீட்டு பணிப்பெண் “எவளோ வெயிட்டா இருக்கு…” என்று சொல்லும் போது தியேட்டரே ரசித்துச் சிரிக்கிறது.
முத்தங்களும், காண்டம்ங்களும் சர்வ சாதாரணமாக புழங்கும் இந்த படத்தில் விரசமான காட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாமல் அழகியலுடன் கடந்திருப்பது மேலும் ரசிக்க வைக்கிறது.
இன்றைக்கு இருக்கும் இளைஞர்களின் மனநிலையை காலக்கண்ணாடியாக காட்டியிருக்கும் இந்த எமோஜி, வயதில் முதிர்ந்தவர்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை தரலாம். ஆனால் இளைஞர்கள் கொண்டாடுவார்கள்.
ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு அள்ளிக் கொள்கிறது. இவரது ஒளிப்பதிவில் வரும் அத்தனை பேருமே ஏதோ ஒரு விதத்தில் அழகாகத் தெரிவது என்ன மாயமோ தெரியவில்லை. சனத் பரத்வாஜ் இசையும் ஓகே.
எமோஜி – எக்ஸ்ட்ரா எனர்ஜி..!