April 28, 2024
  • April 28, 2024
Breaking News
August 12, 2022

விருமன் திரைப்பட விமர்சனம்

By 0 579 Views
ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.
 
ஏற்கனவே கொம்பனில் கார்த்தியின் கொம்பைச் சீவிவிட்ட அவர், இப்போது விருமனிலும் அவரை வீறு கொண்டு எழ வைத்திருக்கிறார்.
 
குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை சொல்லி இருப்பதில் நம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டு லயிக்க முடிகிறது.
 
ஆனால், முத்தையா மீது சாதிய படமெடுப்பவர் என்ற குற்றச் சாட்டும் உண்டு. இருந்தும் இந்தப்படத்தில் அப்படியான சாதிய வன்மம் எதுவும் இல்லை என்ற செய்தி ஆறுதலானது.
 
அம்மாக்களைத் தாண்டி அப்பாக்களை தொழும் படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லி இருப்பதில் இவரை, ‘அப்பனுக்கு புத்தி சொன்ன முத்தையா’ எனலாம்.
 
‘அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல… அது ஒரு நம்பிக்கை’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் அவர்.
 
அப்பாவை அறைந்தவன் கைகளுக்கு மோதிரம் போட்டு அழகு பார்க்கும் அராத்திலும், ஊரே எதிர்த்து நின்று அண்ணிக்கெதிராக நிற்க, பெண்ணைக் காப்பதுதான் ஆணின் கடமை என்று அண்ணனுக்கு புத்தி சொல்லும் அறத்திலும், தன்னை அடித்தவனையும் காப்பாற்றி மன்னிக்கும் மனத்திலும்,

ஒரு கன்னத்தில் காதலி முத்தமிட்டால் மறு கன்னத்தைக் காட்டும் அழகிலும் கார்த்தி மிளிர்கிறார்.

“எதிர்பார்த்து வாழறவன் ஆம்பிளை இல்லை. எதிர்த்து வாழறவந்தான் ஆம்பிளை…” என்று வேட்டியை மடித்துக் கட்டி, தோளை வீரத்தில் குலுக்கி, காலரைத் தூக்கி விட்டு எதிர்த்தவன் மார்பில் எத்தும் வீரத்தில் கார்த்தி… வீரனையும், கொம்பனையும் மிஞ்சுகிறார்.
 
அப்பாவின் கொடுமையை  எதிர்த்தாலும் அண்ணன்களை அரவணைத்துப் போகும் பாசத்தில் கார்த்தி அந்த விருமன் பாத்திரத்துக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறார். ஊருக்கு இப்படி ஒருவர் இருந்தால் ஊரே சுத்தப்படும்.
 
“பெண் என்றால் பூமாதேவியா இருக்கணும், பூலான் தேவியா இருக்கக் கூடாது…” என்று கார்த்தி சொல்வது போலவே, அன்புக்கு அன்பு, தெம்புக்கு தெம்பு என்று வரும் நாயகி அதிதி ஷங்கருக்கு இது முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை. 
 
“இந்த இடத்திலதானே அவன் அடிச்சான்..?” என்று கேட்டு கார்த்தி கன்னத்தில் பூ முத்தம் வைப்பதில் தொடங்கி,
பஞ்சாயத்தில் வைத்து ஊர் முன்னிலையில் கார்த்தியின் கோபத்தை அடக்க, அவர் உதட்டில் புரட்சி முத்தம் வைக்கும் அதிர்ச்சி வைத்தியம் வரை, அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு அதீத திறமை கொண்ட வரவு.
 
கார்த்தியின் மீது கொண்ட காதலில் அதிதி போடும் காதல் குத்து, காலத்துக்கும் ரசிக்கிற சொத்து.
 
இந்த வருட தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தாரகையாக இருப்பார் 2டி கண்டெடுத்த அதிதி. 
 
தன் நடிப்பு ஆசை, மகள் நடிக்க வந்ததில் பூர்த்தியாகி விட்டதாக இயக்குனர் ஷங்கர் பெருமை கொள்ளலாம். 
 
சொந்தத் தங்கையே செத்தாலும் பரவாயில்லை என்று விஷம் குடித்தது தெரிந்தும் காப்பாற்றாமல் விட்ட இருமாப்பு – பிரகாஷ்ராஜ் பிராண்ட். என்னதான் வில்லன் ஆனாலும் ஹீரோவின் அப்பாவாக ஆனதால் பிரகாஷ் ராஜ் மீது கோபம் வரவில்லை. அவரையும் கார்த்திதான் காப்பாற்றுவார் என்பது புரிந்த சங்கதி.
 
சந்தோஷம் வந்தாலும் சங்கடம் வந்தாலும் கருப்பசாமியிடம் வந்து நிற்கும் கார்த்தியின் அம்மா சரண்யா, கணவர் பிரகாஷ்ராஜின் கொடுமை தாங்காமல் கற்பூரமாக தீயில் வெந்து மனதில் வலியை ஏற்படுத்துகிறார். 
 
தன் குடும்பத்துப் பெண்களுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ராஜ்கிரண் அந்தக் கருப்பு சாமியாகவே தெரிகிறார். இந்த வயதிலும் ஆக்ஷனில் என்னா அடி… என்னா மிதி..!?
 
ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிப்பதை விட்டு விட்டு இப்படி வில்லனாக நடித்தாலே இன்னொரு பிரகாஷ் ராஜாக உயரலாம். 
 
காமெடியன்களில் சூரி எப்போதும் தனி வழி. ஓட்டல் எடுக்கும் ஏலத் தொகை எகிறிப் போக , “நாம என்ன ஐபிஎல்ல தோனியையா எடுக்கிறோம்..?” என்கிறாரே… லகலக லந்து..!
 
சிங்கம்புலி அங்கங்கே கேப்பில் பவுண்டரி அடிக்கிறார்.
 
வடிவுக்கரசி வாடிக்கையான வில்லி பாட்டியாக வந்து திருந்துகிறார். ஓஏகே சுந்தருக்கு என்ன சாதிக் கதையானாலும் ஒரே மாதிரி வேடம்தான் கிடைக்கிறது.
 
“இன்னொரு பிறவியா சேர்ந்து வாழப் போறோம்… இருக்கும்போது ஒண்ணா வாழ்வோம்..!” என்கிற வசனம் உலகத்துக்குகே பொதுவானது. இப்படியான வசனங்கள் படம் நெடுக நிறைந்து கிடக்கின்றன. எழுதிய விரல்களுக்கு விருமன் படம் பொறித்த மோதிரம் போடலாம்.
 
ஒளிப்பதிவாளர் தரையிலேயே இறக்கை கட்டிப் பறந்திருக்கிறார். யுவனின் இசையில் ‘ கஞ்சாப் பூ…’ மயக்கி அடிக்கிறது. பின்னணி இசையில் பின்னி எடுக்கிறது.
 
இரண்டரை மணி நேரம் எப்படிக் கடந்தது என்றே தெரியவில்லை…
 
விறு விறு விருமன்..!
 
– வேணுஜி