கனவில் கண்ட ஒரு முகத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் கனவில் வந்த ஒரு பெண்ணை காதலித்து… அவள் இறந்து போக, அதன் தொடர்ச்சியாக அவள் நேரிலும் வந்தால்..?
இப்படி ஒரு கற்பனைக் கதையைப் படமாக்கி அதை ‘பாலு மகேந்திரா டச்’சில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.
கதைப்படி நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஜீவா திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார். அதில் நாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது அவர் மனதில் இருந்த உருவத்தில் ஒரு பெண் கிடைக்க தொடர்ந்து சந்திப்பில் அவள் மீது காதல் வயப்படுகிறார்.
அவளுக்கு பாடகி ஆகும் ஆசை இருக்க தன்னுடைய நண்பர் மூலமாக யுவன் சங்கர் ராஜாவிடம் பாடும் வாய்ப்பு பெற்று தருகிறார் ஜீவா. இதன் மூலமாக உருவாகும் காதல், அவளது பாய் ஃப்ரெண்ட் உள்ளே வரும் போதெல்லாம் தடுமாறுகிறது.
ஒரு கட்டத்தில் அவள் ரயிலில் அடிபட்டு இறந்து போகிறாள். திடுக்கிட்டு எழும் ஜீவாவுக்கு அப்போதுதான் இதுவரை தான் கண்டதெல்லாம் கனவு என்று தெரிகிறது.
இதற்குப் பின் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு ஒன்று கிடைக்க தயாரிப்பாளர் ஒரு பெண்ணை நடிப்பதற்கு அனுப்புகிறார். அவள் அச்சு அசலாக தான் கனவில் கண்ட பெண்ணாகவே இருக்க, ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் உருவாகிறது.
அதன் முடிவு என்ன..? ஜீவாவால் இயக்குனராக முடிந்ததா..? இவர் கண்ட கனவுக்கும் நிஜ நிகழ்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதிப் படம் பதில் சொல்கிறது.
நாயகனாக வரும் ஜீவா புதுமுகமாக இருந்தாலும் இயல்பாக நடிக்க பழகியிருக்கிறார். முகக் குறிகளை மட்டும் தன் முகத்துக்கு ஏற்ப எப்படி வெளிப்படுத்துவது என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் அவரது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும்.
நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா நாகரிக உடைகளுக்கு பொருத்தமாக இருக்கிறார்.
இந்த இருவருமே முழு படத்தையும் ஆக்கிரமித்து இருக்க, இவர்களுடன் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் பாத்திரங்களுக்கு பொருந்தி இருக்கிறார்கள்.
இளமாறன் இசை தேவைக்கேற்ப பயணித்திருக்கிறது. நிறைய இடங்களில் நிசப்தத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போவாசுக்கு ஊட்டியை எப்படிக் காட்ட வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்கிறது. அத்தனைக் குளுமை.
எம்.டி. தமிழரசன், கிருத்திகா தாஸ் ஆகியோரது திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம். டி .தமிழரசன் வசனங்களும் துருத்தல் இல்லாமல் இயல்பாக இருக்கின்றன.
கதை எழுதி இயக்கியிருக்கும் எம்.ஆர்.பாரதி, மென்மையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், காதல் பல பரிமாணங்களைக் கண்டுவிட்ட இன்றைய தலைமுறைக்கு இந்தப்படம் எந்த அளவுக்கு ரசனைக்குரியதாக இருக்கும் என்று தெரியவில்லை.
என்றாலும் இனிய அனுபவத்தைத் தருகிறது ட்ரீம் கேர்ள்..!
– வேணுஜி