April 25, 2024
  • April 25, 2024
Breaking News
September 24, 2022

டிராமா திரைப்பட விமர்சனம்

By 0 487 Views

ஒரே ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை சொல்வது என்பது அசுர சாதனை. அதில் ஒரு பிளாஷ்பேக்கும் அமைந்திருக்கிறது.

பார்த்திபன் ஏற்கனவே நான் லீனியரில் இப்படி ஒரே ஷாட்டில் படம் எடுத்திருந்தாலும் கிட்டத்தட்ட அதே சீசனில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது என்பதால் இதுவும் ஒரு அரிய முயற்சி என்று சொல்ல முடியும்.

இந்த சாதனையை சிறு குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாகக் கடந்து முடித்திருக்கிறார் இயக்குநர் அஜு கிழுமலா.

ஒரு சிற்றூரில் காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு சில நிமிடங்கள் மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி  கொலை செய்யப்படுகிறார்.

அதே நேரத்தில் அங்கே இருக்கும் பெண் காவலர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலும் நடைபெறுகிறது.

இவற்றையெல்லாம் செய்தது யார் என்று உயர் காவல் அதிகாரி கிஷோர் கண்டுபிடிப்பது தான் கதை.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக நகரும் கதையில் ஒரு காவல் நிலையத்துக்குள்ளேயே கதை நடந்தாலும் அதன் உட்புறம், வெளிப்புறம் என்று கேமரா பல இடங்களில் கடந்து படம் பிடித்து இருக்கிறது. 

கொலை நடந்த நேரம் வெளியில் இருந்து வரும் ஒரு நடன ஜோடி, எலெக்ட்ரிசியன்கள் இருவர், சாதிக் கொடுமைக்கு பயந்து தஞ்சமடையும் காதல் ஜோடி மற்றும் அங்கு தலைமை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜெய்பாலாவின் காதலியாக வரும் காவ்யா பெல்லு அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் மீதும் கிஷோரின் விசாரணை பாய்கிறது

காவ்யா பெல்லுவின் பிறந்தநாள் அது என்பதால் காதலியை காவல் நிலையம் வரவழைத்து கேக்கை வெட்டும் ஜெய் பாலாவின் காதல் எபிசோடும் உள்ளே கலக்கிறது.

விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை. கடைசியில் காவியா பெல்லுவை பகடைக்காயாக வைத்து அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் காட்சி அற்புதம்.

கொலைக்குள்ளாகும் சார்லி, வின்செண்ட் நகுல மற்றும் காவலர்களுக்கு இடையேயான பவர் பாலிடிக்ஸ் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.

கிஷோரின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் இன்னொரு காவல் அதிகாரியாக வரும் திருநங்கை கச்சிதமாக நடித்திருக்கிறார்.

இறுதிக் காட்சிகளில் காவியா பெல்லுவும், காதல் வேண்டி தஞ்சமடையும் மரியா பிரின்ஸும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டிய வந்திருக்கும் இந்த ஒரு ஷாட் சினிமாவை.

ஒளிப்பதிவாளர் ஷினோஸ் கைகளுக்கு தங்க காப்பு போடலாம். ஒரு ஷாட் படமானதால் ஆரம்பத்தில் இருந்து மெதுவே நகர்ந்தாலும் கிளைமேக்ஸ் கட்சியிலும், கிஷோர் விசாரணை செய்யும் அந்த சிறு அறையிலும் பல்வேறு கோணங்களைக் காட்டி அசத்தியிருக்கிறார்.

பிஜிபாலின் இசை எது தேவையோ அதைக் கொடுத்திருக்கிறது.

கொலைக்கு உள்ளாகும் சார்லி இடம் பெறும் அந்த பிளாஷ்பேக் காட்சியும் நன்று.

இப்படி ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்குள் ‘ நீட்’ தேர்வு எப்படிப்பட்ட வலியை எளிய மனிதர்களிடம் திணிக்கிறது என்று ஒரு கருத்தை சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர்.

ஆனால் கொலையாளியைக் கண்டுபிடித்து கடைசியில் அழைத்துச் செல்லும் கிஷோர் அதன் பின்னணியில் அப்பேர்ப் பட்ட வலியை தந்திருக்கும் காவியா பெல்லுவைக் குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது செய்து விட்டு போயிருக்கலாம்.

டிராமா – ‘நீட் ‘டான முயற்சி..!