காதலில் தோற்றுவிட்டு போதைக்கு அடிமையான நாயகன் அதர்வா முரளி வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கும், சிறப்பு தகுதியுடன் வாழும் நிமிஷா சஜயனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
யாரும் எதிர்பாராமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது. இதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடைபெறுவதை ஒரு பக்கம் நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
இப்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்க குடும்பமே குதூகலிக்கிறது. ஆனால் கையில் குழந்தையை ஏந்தும் நிமிஷா அது தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்கிறார். அது உண்மைதானா, அவருடைய குழந்தை எப்படி மாறிப்போனது என்பதெல்லாம் மீதிக் கதை.
குடிக்கு அடிமையானவராக அறிமுகமாகும் அதர்வா முரளியின் தைரியம் பாராட்ட வைக்கிறது. நிமிஷா, சிறப்பு தகுதி உள்ளவர் என்று தெரிந்து அந்தத் திருமணத்தை நிறுத்த அவரது நண்பர்கள் முயல, “இவள்தான் என் மனைவி..!” என்று உறுதியாக கூறும் அதர்வாவை ரசிக்க முடிகிறது.
மனைவியைப் புரிந்து கொள்வதிலும், குழந்தையைத் தேடிச் செல்வதிலும் அவரது பாத்திரம் உயர்வு பெறுகிறது.
படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவது நிமிஷாதான். எத்தனை அற்புதமான நடிப்பு..? அவர் மேலேயே நகரும் கதை, ஒரு கட்டத்தில் அதர்வாதான் படத்தின் ஹீரோ என்று புரிந்து கொண்டு அவரை விட்டு விலகுகிறது. இல்லாவிட்டால் நிமிஷாவின் நடிப்பில் அதர்வாவை நாம் மறந்திருப்போம்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரம், தொடக்கத்தில் ஒட்டாமல் அறிமுகமாகி போகப் போக பலம் பெறுகிறது.
அதர்வாவின் அப்பாவாக நடித்திருக்கும் சேத்தன், நிமிஷா சஜயனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், நண்பன் ரமேஷ் திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராஜ் உள்ளிட்டோர் படு இயல்பாக நடித்திருப்பது இயக்குனரின் திறமையை பறைசாற்றுகிறது,
சுப்பிரமணிய சிவாதான் அப்படி ஒரு க்ரைம் நடப்பதற்கு சுத்திரதாரி என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்தின் தன்மைக்கு இசைவாக இருக்கின்றன.
பார்த்திபனின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
குழந்தை கடத்தல்தான் படத்தின் களம் என்றாலும் அதை கொடூரமாக முடிக்காமல் மேன்மையாக முடித்து இருப்பதில் நெல்சன் பாராட்ட வைக்கிறார். இந்தக் களத்துக்காக நிறைய ஆராய்ச்சிகள் அவர் செய்திருப்பது புரிகிறது.
குழந்தைகளைக்
கடத்தும் பெண்மணியை தண்டிக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் அவரது கூற்று அவரை நியாயப்படுத்தி விடுகிறது.
நன்றாக போய்க் கண்டிருக்கும் திரைக்கதை காயத்ரியின் ஐட்டம் சாங் வரும்போது அல்லாடுகிறது.
இரண்டாவது பாதியில் இயக்குனர் தொடும் சோதிட விஷயங்களும் பக்தி நம்பிக்கைகளும் பகுத்தறிவுக்கு பொருந்தாமல் போனாலும் சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
DNA – Different & Neat Approach..!
– வேணுஜி