தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை கொடுத்த ‘திரெளபதி’ படத்தின் தொடர்ச்சியை ‘திரெளபதி 2’ என்ற தலைப்பில் மோகன்.ஜி இயக்கியிருக்கிறார்.
ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் மோகன்.ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் பிலிம் ராஜ் சுந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இயக்குநர் மோகன்.ஜி, ‘திரெளபதி 2’ உருவாக்கம் குறித்து கூறுகையில், “’திரெளபதி’ படத்தின் தொடர்ச்சிதான் ‘திரெளபதி 2’. முதல் பாகத்தின் ஹீரோ பற்றிய கதைதான். அது எப்படி 14ம் நூற்றாண்டுக்கு செல்கிறது, என்பது பற்றிதான் படம் இருக்கும். இதில், மூன்றாம் வீர வல்லாள மகாராஜா பற்றி பேசியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க வரலாற்று உண்மை. அன்னல்கண்டா என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய வரலாற்று புத்தகத்தை மையமாக வைத்துதான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறோம்.
படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள் தான், சில கற்பனையாக சொல்லப்பட்டிருக்கும். அதுவும் கூட இப்படி நடந்திருந்தால், என்ற அடிப்படையில் தான் சொல்லியிருக்கிறேன்.
நமக்கு சேர சோழ பாண்டியர்கள் பற்றிதான் தெரியும். ஆனால், அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியா முழுவதையும் ஆண்டவர்கள் தான் ஒய்சாலர்கள். கர்நாடகாவை தலைமையாக கொண்டு தென்னிந்தியா முழுவதும் 80 பாளையங்களை கொண்டு ஆண்டார்கள். அதில் ஒரு பாளையத்தை வல்லாள மகாராஜாக்கள் ஆண்டார்கள். குறிப்பாக மூன்றாம் வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். இப்போதும் திருவண்ணாமலை கோவிலில் கிளி கோபுரம் ஒன்று இருக்கிறது, அவருக்கு சிலை இருக்கிறது. அங்கு அவருக்கு வருடம் வருடம் விழா நடக்கும், அதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வல்லாள மகராஜாவுக்கு கீழ் ஆட்சி செய்தவர்கள் காடவராயர்கள், அவர்கள் விழுப்புரத்தை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. அவர்களைப் பற்றி தான் இந்த படம் பேசுகிறது. நாயகன் ரிச்சர்ட் வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நட்டி நட்ராஜ் மூன்றாம் வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்புராயர்கள் குறித்தும் சிறிது பேசியிருக்கிறேன், சம்புராயர் வேடத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார்.

இந்த கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பல வரலாற்று ஆசிரியர்களை சந்தித்து, அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், பல ஆதாரங்கள் அடிப்படையிலும் சுமார் ஒரு வருடமாக திரைக்கதை எழுதினேன். இதுவரை சொல்லப்படாத மற்றும் மக்கள் அறிந்திராத வரலாற்றை பேசும் படமாக இருக்கும்.
பல்லவர்கள் ஆட்சியின் வரலாற்றை சொல்லும் ஒரு படைப்பாக இருக்கும். அப்போது சுல்தான்கள் இங்கு வந்து என்ன செய்தார்கள், அவர்கள் படையெடுப்பின் நோக்கம் என்னவாக இருந்தது, அவர்களை காடவராயர்கள் எதற்காக எதிர்த்தார்கள், எப்படி எதிர்கொண்டார்கள், என்பதை தான் படம் பேசுகிறது.
இந்த கதையை படமாக எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது, அது என்ன ? என்பதை இப்போது சொல்ல மாட்டேன், அடுத்தடுத்த சந்திப்புகளில் சொல்கிறேன். இப்போது சொன்னால் படம் குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் எழும்.” என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி படம் குறித்து கூறுகையில், “எங்கள் சக்திக்கு மீறிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இயக்குநர் மோகன் ஜி மற்றும் அவரது குழுவின் கடுமையான உழைப்பால் 31 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் பேசுகையில், “படம் முழுவதும் இரண்டு கேமராக்களை கொண்டு படமாக்கினோம். போர் காட்சிகளில் மூன்று கேமராக்கள் இருக்கும். படத்தில் ஏழு சண்டைக்காட்சிகள் இடம் பெறுகிறது. அனைத்தும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. வரலாற்று கதையாக இருந்தாலும், பீரியட் கலர் டோன் பயன்படுத்தாமல், பலவித வண்ணங்களை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால், ஒரு விளம்பர படத்தை பார்க்கும் அனுபவத்தை படம் கொடுக்கும்.” என்றார்.
மேலும், படத்தில் பாடகி சின்மயி குரலில் பாடல் இடம் பெறாது, என்று கூறிய இயக்குநர் மோகன்.ஜி, ”திரெளபதி படத்தில் நடித்ததை கெட்ட கனவாக பார்க்கிறேன்” என்று கூறிய அப்படத்தின் நாயகி ஷீலா, அப்படி கூறியது ஏன் ? மற்றும் சின்மயியின் விமர்சனங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் ? அவர்கள் இப்படி பேசுவது ஏன்? என்பதற்கான உண்மைகளை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்லப் போவதாக தெரிவித்தார்.