August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்
May 3, 2019

ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்

By 0 788 Views
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்திருக்கிறார்கள். 
 
இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம்.
 
இந்தப் படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில்தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் முடிவெடுக்க விரும்புபவர். எனவே, இந்த கருத்துடன் தொடர்புடைய, கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும் ஒரு பாடல் இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
 
அதற்கு ஏற்றவாறு கலை இயக்குனர் உமேஷ் புதுமையான முறையில் மிக பிரமாண்ட செட் அமைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான் சார், நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் போன்ற பிரபலங்களுடன் என் முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.
 
ஹரீஷ் கல்யாண் அற்புதமாக நடனம் ஆடக் கூடியவர், 50 நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து மிகச்சிறப்பாக தனது பங்கைச் செய்திருக்கிறார். பாடல் நாங்கள் கற்பனை செய்ததை விட மிகவும் அழகாக வந்திருக்கிறது. எங்கள் சுய திருப்தியையும் தாண்டி, ஸ்ரீ கோகுலம் கோபாலன் சார் மிகவும் ஆதரவாகவும், முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி..!” என்றார்.
 
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த முழுநீள பொழுதுபோக்கு படத்தில் ரியா சக்ரவர்த்தி மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
 
‘பியார் பிரேமா காதலி’ல் ஒரு ‘ரொமாண்டிக்’ ஹீரோவாகவும், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்திலும் நடித்த ஹரீஷ் கல்யாண் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.