11-வது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.
இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அதிரடியாகக் களமிறங்கினர்.
டுபிளெசிஸ் சீக்கிரத்திலேயே வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த ரெய்னாவும் ஆட்டமிழக்க, வாட்சன் அபாரமாக ஆடி 51 ரன்களில் சதம் அடித்தார். இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது.
வாட்சனும், அம்பட்டி ராயுடுவும் அதிரடியாக ஆடி ஒரு ஓவரையும், எட்டு விக்கெட்டுகளையும் மீதம் வைத்து சென்னை அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
இதன் மூலம் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.