March 28, 2024
  • March 28, 2024
Breaking News
August 31, 2022

கோப்ரா திரைப்பட விமர்சனம்

By 0 848 Views

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும். 

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது.

விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை என்றில்லாமல் இதில் தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை நிறைவேற்றுவதற்காக பல்வேறு மாறுவேட கெட்டப்புகளில் விக்ரம் வருவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த காட்சிகளோடு அந்தந்த கெட்டப்புகள் முடிந்து விடுகின்றன.

ஹீரோவில் இருந்து தொடங்கும் கதைக்கு பதிலாக இந்த படம் வில்லனில் இருந்து தொடங்குகிறது. சிறிய வயதிலேயே சர்வதேச நிறுவனத் தொழில் அதிபராக பொறுப்பேற்கும் வில்லன் ரோஷன் மேத்யூ, தன் தொழிலை விரிவு படுத்துவதற்காக நிறைய தில்லுமுல்லுகள் செய்ய, பல நாடுகளிலும் அவரது தொழில் முடக்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை கொலை செய்யும் அவரது திட்டத்திற்கு ஹீரோவான விக்ரம் ஸ்கெட்ச் போட்டுக் காரியத்தை முடிக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது இந்த படத்தில் புதுமையான விஷயம். நேரடியாக பிரச்சனைகளில் தலையிடாத வில்லன் அவருடைய உறவினர் சுரேஷ் மேனன் மூலம் அசைன்மென்ட்களை கொடுக்கிறார். சுரேஷ் மேனனுக்கு தெரிந்த பத்திரிகையாளர் கே.எஸ். ரவிக்குமார் அந்தப் பொறுப்புகளை பெரும் பணம் வாங்கிக்கொண்டு முடித்துக் கொடுக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரிடம் நிழல் ஏஜெண்டாக வேலை செய்யும் நாயகன் விக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை – பெரும்பாலும் அவையெல்லாம் கொலைகள் தான். பக்காவாக முடித்துக் கொடுக்கிறார்.

கொலைகள் என்றால் சாதாரண மனிதர்களை இல்லை. ஸ்காட்லாந்து இளவரசர் – ரஷ்ய ராணுவ ஜெனரல் என்று அவர் கை வைக்கும் இடங்கள் எல்லாம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருக்க, இன்டர்போல் அதிகாரியான இர்பான் பதான், கோப்ரா என்ற போர்வையில் மறைந்திருக்கும் விக்ரமைப் பிடிக்க படாத பாடு படுகிறார்.

கோப்ரா விக்ரம் பிடிபட்டாரா, இன்டர்போல்  இர் பான் பதான் அவரை பிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை.

விக்ரமுக்கு உற்சாகமான கதை. அதனால் அவரும் இன்வால்வ்மென்டுடன், தான் இதுவரை நடித்த முக்கியமான படங்களை நினைவுபடுத்தி நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் பலத்தை விட அறிவுக்கான பலம்தான் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. 

முக்கியமாக அவரது ஒவ்வொரு திட்டமும் கணக்கு வாத்தியான அவரது கணக்குப் பாடத்தின் அடிப்படையில் அமைவதும் அதன்படியே அவர் தன் காரியங்களை கச்சிதமாக முடிப்பதும் புது ஐட்டம். அதேபோல் எப்பேர்ப்பட்ட இன்டர்நேஷனல் கம்ப்யூட்டராக இருந்தாலும் அதை ஹேக் செய்வதும் அதன் பின்னணியில் இருக்கும் மர்மமும் இரண்டாவது பாதி கதையை நகர்த்துகிறது.

விக்ரமுக்கு நேரடி ஜோடியாக வருகிறார் பேராசிரியை ஸ்ரீநிதி ஷெட்டி. முற்றிய கரும்பு போல் இருக்கும் அவர் வளைய வளைய வந்து விக்ரமை காதலிப்பதும், விக்ரம் விலகி விலகி போவதுமாக இருக்க, முடிவில் அந்த காதல் முடிவுக்கு வந்ததா என்பது ஒரு சஸ்பென்ஸ்.

இன்னொரு நாயகியாக வரும் மிருணாளினி ரவிக்கு, விக்ரமின் இளவயது நடிகருடன் காதல் என்பதால் நேரடியாக விக்ரமுடன் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது.

மூன்றாவது கதாநாயகியான மீனாட்சி கோவிந்தராஜனுக்கு ஸ்ரீநிதி ஷெட்டியிடம் படிக்கும் மாணவி வேடம். இன்டர்போல் அதிகாரி இர்பான் பதானுக்கே டப் கொடுக்கும் கணக்குப் புலி வேடம் மீனாட்சிக்கு. அந்த வகையில் அவர் இந்த படத்தில் நடித்ததில் பெருமை கொள்ளலாம்.

விக்ரமுக்கு அடுத்தபடியாக படத்தில் ஒருவரது நடிப்பை சொல்ல வேண்டும் என்றால் அது நடிகராக இந்த படத்தில் அறிமுகமாக இருக்கும் இர்பான் பதானைத்தான். கிரிக்கெட் ஃபீல்டில் ஹீரோவான அவர் சினி ஃபீல்டிலும் ஹீரோவாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவரது மிடுக்கான தோற்றமும் நடிப்பும் நமக்கு உணர்த்துகிறது.

கோப்ராவை பிடிக்க தமிழ்நாட்டில் அமர்த்தப்படும் காவல் அதிகாரியான ஜான் விஜய்யை பார்த்தவுடனேயே நமக்கு புரிந்து விடுகிறது, இவர் வில்லனின் கையாளாக இருப்பார் என்பது.

வில்லனில் இருந்து ஆரம்பிக்கும் கதையாக இருந்தாலும் வில்லன் ரோஷன் மேத்யூ அந்த வேடத்துக்கு அவ்வளவு பொருத்தமானவராக இல்லை. எப்போதுமே ஹீரோவை விட வில்லன் பலம் பொருந்தியவராக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் எடுபடும் என்ற அளவில் இதில் வில்லனுடைய தோற்றமும் பலமும் குறைவாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் உலகமெல்லாம் பறந்து பறந்து ஆங்கிலப்படம் போல் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் குழப்பம் இல்லாத திரைக்கதை இருந்திருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும்.

ஒவ்வொரு பாத்திரத்துக்கான கிளைக் கதையாக, கதை வளர்ந்து கொண்டே போவதில் நிறைய கேள்விகளும் குழப்பமும் மிஞ்சுவதைத் தவிர்த்து இருக்கலாம்.

விகிரமின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், அம்மா, சிறு வயது பாத்திரங்கள் அவ்வப்போது காட்சிகளில் வருவது புதுமையாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி இருக்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டடித்து விட, இசையை மட்டுமே கவனிக்க வேண்டி இருக்கிறது. மிக நீளமான படத்தில் அவரும் முடிந்தவரை இசைத்துத் தள்ளி இருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவுதான். பறந்து பறந்து படமாக்கி இருப்பதில் ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம்.

பத்திரிகையாளரான கே.எஸ்.ரவிக்குமார் சைடு பிசினஸாக கொலைகளுக்கான அசைன்மெண்டை எடுத்து செய்வது ரொம்ப ஓவர்.

குழப்பங்களை தவிர்த்து இருந்தால் கோப்ரா வெற்றி கோபுரமாக உயர்ந்திருக்கும்.

கோப்ரா – விஷயத்தை மிஞ்சிய விஷம்..!