திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள
9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார்.
குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
கொரோனா காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், திரைப்படத் தயாரிப்புகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் என்றும் கூறினார்.
ஊதிய மானியம், 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன், வரிவிலக்கு, குறைந்தபட்ச மின்சார கட்டணம் உள்ளிட்ட திரைப்படத்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார்.
நடப்பு மாதத்தில் கொரோனா தாக்கத்தை ஆய்வு செய்த பிறகே திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவெடிக்கப்படும் என கூறினார் அவர்.