September 11, 2025
  • September 11, 2025
Breaking News
September 11, 2025

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

By 0 69 Views

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.

சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது ஐம்பது லட்சம் மதிப்புள்ள போதை மருந்து என்று தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ஜி.வியின் முதலாளி முத்துக்குமார் தேஜுவைக் கடத்தி வைத்துக்கொண்டு காணாமல் போன போதைப்பொருள் அல்லது ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு காதலியை அழைத்துப் போகலாம்… அல்லது அவளை வெளிநாட்டு பாலியல் தொழிலுக்கு விற்று விடுவதாகச் சொல்ல, நண்பன் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்துக்கு முயற்சி செய்கிறார் ஜி. வி.

அதேநேரம் பல பெண்களைக் காதலித்து கழற்றி விட்டு அவர்களுக்கு திருமணமானவுடன் அவர்களின் நெருக்கமான படங்களை வைத்து பிளாக்மெயில் செய்யும் லிங்கா, அப்படி தொழிலதிபர் ஶ்ரீகாந்தின் மனைவியான பிந்துமாதவியிடம் இரண்டு கோடிப் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார்.

அது தொடர்பாக அவர்களின் குழந்தையைக் கடத்தும் திட்டம் போட்டு, அந்த வேலையைப் பணத்துக்காக அலையும் ஜி.வி, ரமேஷ் திலக்கிடம் கொடுக்கிறார்.

இப்படி சூழ்நிலையால் குற்றம் செய்யப் புறப்படும் இவர்களின் திட்டம் என்ன ஆனது என்பதுதான் மீதி.

ஜி.வியின் தோற்றத்துக்கும், அப்பாவித் தனத்துக்கும் ஏற்ற பொருத்தமான வேடம். அவர் அந்தப் பாத்திரத்தை ஏற்றதாலேயே அவரைக் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை.

ஆனால், நாயகி தேர்வுக்குதான் பாவம். காதலிக்கவோ, டூயட் பாடவோ வேலையின்றி கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளிலும் அழுகாச்சியாக வருகிறார்.

ஒரு புனிதனாகவே நம் மனதில் இடம் பெற்றுவிட்ட ரமேஷ் திலக்கும் அந்த நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

இன்னொரு நாயகனாக இருக்கும் ஶ்ரீகாந்த், அவர் நேரடி நாயகனாக வந்த படங்களைக் காட்டிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

பிந்து மாதவியும் குணச்சித்திர வேடத்தில் அழகாகப் பொருந்தியிருக்கிறார். 

அவர்களின் குழந்தையும் கியூட். ஆனால், அது எத்தனை பேரின் கைகளுக்கு மாறிப் போகிறது என்பதைப் போட்டியே வைக்கலாம். 

ஆனால், ஒவ்வொரு கை மாறும்போதும் அது பாதுகாப்பாகவே இருப்பதில் நம் மனது ஆறுதல் பெறுகிறது.

வில்லத்தனத்தைத் தாண்டி லிங்காவுக்கு வேறு வேலையும் கொடுத்திருக்கலாம்.

ஒளிப்பதிவும், இசையும் பக்காவாகப் பொருந்தி படத்தின் பரபரப்புக்கு உதவுகிறது.

இருக்கும் பாத்திரங்களுக்கு உள்ளேயே பிரச்சினை இடம் மாறி மாறிப் போக, ஒருவரை ஒருவர் துரத்த இயக்குனர் நிறைய வேலை பார்த்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன் வரும் இருபது நிமிடங்கள் mis பண்ணக் கூடாத மின்னல் வேகத் திரைக்கதை.

பிளாக்மெயில் – எல்லோரும் நல்லவரே..!

– வேணுஜி 

ரேட்டிங் – 3.75/5