சைக்கலாஜிக்கல் திரில்லர் எனப்படும் உளவியல் ரீதியான படங்களின் முயற்சி தமிழில் அரிதாகத்தான் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.
படத்தில் மொத்தம் ஆறு கேரக்டர்கள்தான். இதை வைத்து முழுப் படத்தையும் சொல்ல முடியும் என்று நினைத்த இயக்குனரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. அப்படியே படத்தை லாவகமாக நகர்த்தியும் இருக்கிறார்.
படத்தின் ஆகப்பெரிய விஷயம் நாயகன் ஷபீர் கல்லரக்கலும், நாயகி மிர்னாவும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து அதில் அமிழ்ந்து நடித்திருப்பதுதான். அந்த அளவுக்கு அவர்களிடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
‘கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல்…’ என்பார்களே… அப்படி படத் துவக்கத்தில் ஷபீரும் மிர்னாவும் கண்களை கட்டிக்கொண்டு காட்டுக்குள் அலைந்து திரிந்து ஒருவரை ஒருவர் ஸ்பரிசிக்கும் தருவாயில் தங்களின் கண் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார்கள் அங்கே அவர்களது திருமணம் நடந்தேறுகிறது.
ஒருவரைப் பற்றி ஒருவர் அறியாமலேயே அவர்கள் திருமணம் நடந்திருக்கிறது என்பதை ஒரே காட்சியில் சொல்லும் இயக்குனரின் குறியீட்டு முயற்சி இது.
அடுத்து மிர்னா கர்ப்பம் தரித்திருக்க அவரை கூட்டிக்கொண்டு கணவர் ஷபீர் காட்டுப் பகுதியில் பயணிக்கிறார். மிர்னாவுக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க காட்டுக்குள் இருக்கும் ஒரு இயற்கை வைத்தியசாலைக்கு அழைத்துப் போகிறார் ஷபீர். அங்கே அவர்கள் இருவருக்கும் நேரும் உளவியல் சிக்கல்கள்தான் கதை.
ஷபீரின் பாத்திரத்தைப் புரிந்து கொள்வது சற்றே கடினமாகத்தான் இருக்கிறது. கதை போகிற போக்கில் அவர் ராணுவத்தில் போர் முனையில் பணிபுரிந்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பி இருக்கிறார் என்பது புரிகிறது.
போர் முனையில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவருக்கும் ஏற்பட்டு தேவையற்ற பயம், பதற்றம், சந்தேகம் எல்லாமும் வந்து வந்து போகின்றன.
அந்த உளவியல் சிக்கல்களை தனது அற்புதமான நடிப்பின் மூலம் உணர்த்தி இருக்கிறார் ஷபீர். படத்துக்குப் படம் வித்தியாசமான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து உடல் மொழியில் இருந்து ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் ஷபீருக்கு திரையுலகம் இன்னும் நிறைய வாயில்களைத் திறந்து விடும்.
அவரை விடவும் சவாலான வேடம் மிர்னாவுக்கு. அத்தனை பெரிய வயிற்றைத் தாங்கிக் கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து இயற்கை சிகிச்சைக்கு வந்த இடத்தில் ஒவ்வொருவரும் நடந்து கொள்வதில் பதற்றப்பட்டு பயந்து… ஒரு கட்டத்தில் அவர்களே தேவலாம் என்கிற அளவில் கணவனுக்கு பயந்து… ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவர் படும் பாடு நம் இதயத்தைப் பிசைகிறது.
அதிலும் யாருடைய துணையும் இன்றி வயிற்றில் பனிக்குடம் உடைந்து வலியில் அவர் அணு அணுவாகத் துடிக்கும் காட்சி உலகின் ஒட்டுமொத்த பெண்ணினத்தின் பிரச்சினையையும் நம்மைப் புரிந்து கொள்ள வைத்து விடுகிறது.
மிர்னாவின் அர்ப்பணிப்புள்ள நடிப்புக்கு இந்தப் படம் அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தரும்.
இந்த இருவருமே ஒட்டுமொத்த படத்தில் வியாபித்து நிற்க, இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகர் இசை இப்படத்திற்கு புதிய பரிமாணத்தைத் தந்திருக்கிறது. உதய் தங்கவேலின் ஒளிப்பதிவும் உளவியல் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஒளியிலும், காட்சிகளிலும் உயிர்ப்புடன் பயணப்பட்டு இருக்கிறது.
பிரச்சினைகளை நேர்க்கோட்டில் புரிய வைக்காமல் குறியீடுகளின் மூலமே புரிய வைக்கும் உத்தி நவ யுக சினிமாவில் புதிய முயற்சிதான் என்றாலும் அது ஜனரஞ்சக ரசிகர்களைச் சென்று சேர்வது கடினம்தான்.
அந்த வகையில் சராசரியான சினிமா ரசிகனுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத இந்தப் படம் கலை விமர்சகர்களிடம் கணிசமான பாராட்டுகளைப் பெற்றுத் தரும்.
அந்த வகையில் விருதுகளின் வழியே பயணிக்கும் படமாகவும் இது இருக்கும்.
பர்த் மார்க் – கலைப் படைப்பில் பெஞ்ச் மார்க்..!
– வேணுஜி