May 17, 2024
  • May 17, 2024
Breaking News
February 23, 2024

பைரி திரைப்பட விமர்சனம்

By 0 233 Views

வட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி.

100 வருடங்களாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தை இன்றைய நாகர்கோயில் பகுதி வாழ்வியலுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.

நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது மூதாதையர் போலவே புறா வளர்ப்பு மற்றும் பந்தயத்தில் ஆர்வமும், ஆசையும் இருக்க, அதனாலேயே சீரழிந்த குடும்பம் என்பதால் அவரது தாய் விஜி சேகர், மகன் அந்தப்பக்கம் போகாமல் பார்த்துக் கொள்கிறார்.

ஆனாலும், தோளுக்கு மிஞ்சி வளர்ந்த மகனின் காலுக்கு தாயின் அடக்குமுறைச்சங்கிலி காவல் போட முடியாமல் போக, புறாவும் பொழுதுமாக நகர்கிறது சையத்தின் வாழ்க்கை.

ஆனால், அதே ஊரில் புறா பந்தயம் நடத்தும் பல குழுக்களுடன் அவருக்கு அடிதடி தகராறு இருந்து வர, அதில் மோசமான ஆசாமியாக இருக்கும் …. சையத் மோத, என்ன ஆகிறது என்கிறது இந்த முதல் பாகம்.

ஆமாம்… இது முதல் பாகமேதான். இதன் இரண்டாவது பாகமும் கண்டிப்பாக வெளிவரும் என்பதாக முடிகிறது இந்த முதல் பாகத்துக் கதை.

சையத் மஜீத்தின் நடிப்பு அவரது பாத்திரத்தின் இயல்பை சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அந்தப் பாத்திரத்தை ரசிக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி.

அம்மா உட்பட அத்தனை பேருடனும் முரண் கொண்டு முரண்டு பிடிக்கும் அவரை ஒரு ஹீரோவாக ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனாலும் அறிமுக நடிகர் என்கிற பதற்றமோ, பயமோ, அனுபவமின்மையோ தெரியாமல் அற்புதமாக நடித்திருக்கிறார் மஜீத்.

அவரது நண்பராக நடித்திருக்கும் ஜான் கிளாடி தான் இந்த பட இயக்குனரும் என்பது ஆச்சரியமான தகவல். இடியே விழுந்தாலும் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது கேரக்டர் தமிழ் சினிமாவுக்குப் புதிது. என்றாலும், அவரால்தான் தன் மகன் கெட்டுப் போகிறான் என்று நம்பும் சையத்தின் தாய் விஜி சேகர், ஜானின் தாயைப் பாலியல் தொழிலாளி என்றெல்லாம் வீடேறி வந்து திட்டும் போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல், அதிராமல் இருப்பது என்ன மாதிரிக் கேரக்டர் என்று தெரியவில்லை.

சையத் மஜீத்துக்கு இரண்டு ஜோடிகள். அவரை விரும்பும் சரண்யா ரவிச்சந்திரனும், அவர் விரும்பும் மேக்னா எலனுமாக இருக்க,  ஜான் கிளாடிக்கும் ஆசை நாயகி ஒருத்தியும் காதல் நாயகி இன்னொருத்தியுமாக இருக்கிறார்கள்.

இந்த சாமானியர்கள் இப்படி இரட்டைக் குதிரை சவாரி செய்வதெல்லாம் இயல்பு வாழ்க்கையில் சாத்தியமா என்றே தெரியவில்லை.

மெயின் வில்லனாக வரும் வினு லாரன்ஸ் கேரக்டரை வில்லன் என்பதாலேயே கொடூரமானவராகக் காட்டுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

புறா பந்தயத்தில் அவர் செய்யும் தில்லுமுல்லுகளை சையத் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதையின் உயிர் நாடி.

ஆனால் அவர் என்ன விதமான தில்லுமுல்லு செய்தார் என்பது பார்வையாளர்களாகிய நமக்குப் புரியவே இல்லை. வானத்தில் புறா தெரிகிறது என்று அவர் சொல்லும்போது எல்லோருக்குமே அந்த புறா தெரியதான் செய்கிறது. அப்புறம் எப்படி அந்த பந்தயம் தில்லுமுல்லாகிறது என்று புரியவில்லை.

அதைக் காரணம் காட்டி அவரது வல்லமை பற்றி உடன் இருப்பவர்கள் சொல்லியும் ஓவராக ஏகிறும் சையத் மீது நமக்கே ஒரு கட்டத்தில் கோபம் வருகிறது. 

அத்துடன் அவர்களுக்குப் பாதுகாவல் அரணாக நிற்கும் ரமேஷ் பண்ணையார் என்ற கேரக்டரைக் கூட மதிக்காமல் சையத் சலம்புவது கொஞ்சம் கூட இயல்பானதாக இல்லை. 

இப்படிப் படத்தின் திரைக்கதையிலும், பாத்திரப் படைப்பிலும் நிறைய சறுக்கல்கள் இருப்பதால் படத்தின் உண்மைத் தன்மையுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

படத்தில் பெரும்பாலும் சத்தமும் சண்டைமாகவே நகர்வதால் கதையின் ஜீவன் நம்மை பாதிக்கவே இல்லை. புறாவை பந்தயத்திற்கு எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய எந்த விதமான புரிதல்களும் இல்லாமல் சும்மாவே வானத்தில் புறாவை பறக்க விட்டு டைம் பார்த்துக் கொண்டிருப்பது புறா பந்தயத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.

பைரி என்றால் புறாக்களைத் தாக்கும் ஒரு கழுகு இனமாம். அதைத் தலைப்பில் வைத்த காரணமே புறாக்கள் தாக்கப்படுவது போல புறா பந்தயக்காரர்கள் வலிமைமிக்க தாதாக்களிடம் மல்லுக்கட்டி மடிந்து போகிறார்கள் என்பதைச் சொல்லத்தான்.

ஆனால் பைரி என்றால் என்ன என்பதைப் படம் பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அளவில் இதுபோன்று தலைப்பு புரியாத நல்ல படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் வேலைக்கு ஆனது இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்தகுமார்ரும் படத்தொகுப்பாளரும் இதை ஒரு கொரியன் படத்தைப் போன்று நேர்த்தியாகத் தந்திருப்பதில் இதை ஒரு நல்ல படம் போன்று நம்ப  வைக்கிறது.

அதில் அருண் ராஜின் இசையும் கை கோர்த்திருக்கிறது.

ஆனால் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் எதிராளிகளின் நெஞ்சிலும், கால்களிலும் மடார் மடார் என்று நாயகன் அடிக்க அடிபட்டவர்கள் அடுத்த காட்சியிலேயே எழுந்து வந்து வசனம் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத விஷயங்கள்.

அந்த வகையில் படைப்பில் மாத்திரமே பரவசப்படுத்தும் இந்த பைரி…

நாஞ்சில் சினிமாவின் வன்ம டைரி..!

– வேணுஜி