December 2, 2024
  • December 2, 2024
Breaking News
February 23, 2024

ரணம் திரைப்பட விமர்சனம்

By 0 254 Views

நாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப்.

முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ்.

அந்த முகங்களின் அனாட்டமியை வைத்து அந்த உருவத்தை அப்படியே வரைந்து கொடுக்கும் திறமை பெற்றவராக இருக்கும் அவர் தீர்க்க முடியாத பல கேஸ்களிலும் கூட அதன் குற்றப் பின்னணியை கரைம் ஸ்டோரியாக எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறார்.

இந்நிலையில் மூன்று துண்டுகள் ஆக்கப்பட்ட ஒரு உடல் சென்னையில் மூன்று இடங்களில் எரிக்கப்பட்டு வீசப்படுகிறது. அதில் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் என்று இருக்க இந்த போலீஸ் ஸ்டேஷன்தான் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கிடைத்த உடல் பகுதிகளை வைத்து ஆராய்வதில் வைபவின் உதவியை நாடினாலும் ஒரு கட்டத்தில் வைபவை அந்த கேசில் இருந்து விடுவிக்கிறார். அதே நாளிலிருந்து அந்த இன்ஸ்பெக்டர் மாயமாகவும் ஆகிறார்.

அந்த இடத்துக்கு பெண் இன்ஸ்பெக்டரான தான்யா ஹோப் வர, காணாமல் போன இன்ஸ்பெக்டர் பற்றியும் கிடைத்த சடலத்தின் உடல் பாகங்கள் பற்றியும் எந்த முடிவுக்கும் வர ஹோப் இல்லாமல் இருக்க, தானியாவுக்கும் உதவியாக இருக்கிறார் வைபவ்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கேசின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

முன்பே சொன்னது போல் வைபவுக்கு மிகவும் சீரியஸான வேடம். ஒரு விபத்தில் காதலியை மட்டும் அல்லாமல் தன் ஆரோக்கியத்தையும் இழந்திருக்கும் அவர் அந்தக் கேரக்டரில் அச்சு அசலாகப் பொருந்தி இருக்கிறார். அவரது வெள்ளி விழா படமான இது அவர் திறமையை சரியாக வெளிக்காட்டும் படமாகவும் அமைந்திருக்கிறது.

இன்ஸ்பெக்டர் வேடத்துக்கும் சரி, அந்த உடைக்கும் சரி கம்பீரமான அழகைக் கொடுத்திருக்கிறார் தான்யா ஹோப். ஆனால் ஒரு காவல் அதிகாரியாக அவர் எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

இரண்டாவது பாதியில் வரும் நந்திதா ஸ்வேதாவின் பாத்திரம் அழுத்தம் மிகுந்தது. நந்திதாவும் அற்புதமாக நடித்து அந்த பாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

அவரது மகளாக நடித்திருக்கும் பாடகி பிரணிதி எப்படியும் ஒரு பாடலைப் பாடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம்.

தலைமை காவலராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு முக்கியமான பாத்திரம்.

வைபவின் நண்பராக நடித்திருக்கும் டார்லிங் மதன், விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்கள்.

பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு கூட்டி இருக்கிறது.

அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் அரோல்.

நிறைய விஷயங்களை தொட்டுக் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப் அதுவே கமர்ஷியல் விருந்தை திகட்ட வைத்து இருக்கிறது…

அந்த.வகையில்…

ரணம் – ஓவர்டோஸ் அஜீரணம்..!