‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு களமாக இருக்கிறது. அது மட்டும்தானா என்றால் இல்லை… வேறு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைப் படத்தில் பார்த்து ரசித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் வெளியே சொல்லவில்லை. நாங்கள் பல தொழில்களை மேற்கொண்டிருக்கிறோம். அதில் சினிமாவும் ஒன்று. அதனால் படத்தில் அரசியல் பேசவில்லை…” என்றார்.
விஜய் பற்றிக் குறிப்பிடும்போது “அவர் இதில் எத்தனை வேடங்கள் ஏற்றிருக்கிறார் என்பதைப் படத்தில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள். கால்பந்து விளையாட்டுக்காக அவர் பயிற்சி பெற்று காட்சிகளில் நடித்தது ஆச்சரியமாக இருந்தது. பெரிய நடிகரான அவர் இதெல்லாம் தேவையில்லை என்று ஒதுக்காமல் இப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது..!” என்றார்.
அட்லீ பற்றிய கேள்விக்கு, “படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!” என்றார்.
இதன் மூலம் பிகில் படம் பட்ஜெட்டைத் தாண்டி போனதாக வந்த தகவல்கள் உறுதியாகின்றன.
குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க அட்லீ எப்போது கற்றுக்கொள்ளப் போகிறார்..?