நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக சொந்த ஊருக்கு வருகிறார்.
அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார்.
இறுதியில் அவர் நினைத்ததை போல் விவசாயிகளுக்கு உதவ முடிந்ததா அல்லது நாசாவிற்கு திரும்பிச் சென்றாரா என்பது தான் மீதிக்கதை.
படத்துக்கு படம் ஆங்கில படங்களை போல் வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஜெயம்ரவிக்கு இந்தப்படமும் அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது.
உணர்ச்சிகரமான உடல்மொழியை வெளிப்படுத்துவதில் ஜெயம் ரவியின் நடிப்பு இந்தப் படத்தில் அபாரமாக இருக்கிறது. படத்தின் தன்மையை உணர்ந்து அவர் நடித்திருப்பதால் இதை நடிப்பென்றே கொள்ள முடியவில்லை. அத்தனை இயல்பு.
கதாநாயகி தேவைப்படாத படத்துக்கு பாடல்களுக்காகவும் காதல் காட்சிகளுக்காக மட்டுமே நிதி அகர்வால் பயன்பட்டிருக்கிறார்.
மனோரமாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிராண்டட் அம்மாவாக அறியப்படும் சரண்யா பொன்வண்ணன் இதிலும் ஜெயம் ரவியின் அம்மாவாக வந்து தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விவசாயத்துக்கும் ஜெயம் ரவிக்கும் வில்லனாக இருக்கும் கார்ப்பரேட் அதிபர் ரோனித் ராய் தன் பங்கை பொருத்தமாக செய்திருக்கிறார்.
இவர்களுடன் ஜான் விஜய், ராதா ரவி மற்றும் தம்பி ராமையா தங்கள் அனுபவ நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
இமானின் இசையில் தமிழன் என்று சொல்லடா பாடல் எப்போதும் நாம் கொண்டாடும் பாடலாக இருக்கும். டுட்லியின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கிறது.
புளித்த மாவு அல்லாமல் கனமான கதைக்களத்தில் பயணம் செய்திருக்கும் இயக்குனர் லக்ஷ்மன் விண்வெளி, விவசாயம் என்ற சிக்கலான விஷயங்களை கையாளத் தெரியாமல் தன் விருப்பத்துக்கு அவற்றின் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுனர்களின் துணையோடு திரைக்கதையை அமைத்திருந்தால் நம்பகமாகவும், காலத்துக்கும் கொண்டாடப்படும் படமாகவும் அமைந்திருக்கும் இந்த பூமி.
நல்ல விஷயங்களைச் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதை நன்றாகவும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்..!
பூமி – விண்ணிலிருந்து மண்ணுக்கு…
Related