பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல பஸ்-ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், தனியார் பள்ளி வேன்கள் வழக்கம் போல ஓடின. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடித்தது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பணிமனைகளில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெரும்பாலும் பஸ்கள் இயக்கப்பட்டன.
வணிகர் சங்கங்களைப் பொறுத்தவரை வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தினர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைகளை மூடி இருந்தனர். ஆனால், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. மார்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் என அனைத்தும் திறந்து இருந்தன.