கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தை வெளியிட டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தடை வாங்கியுள்ளது.
இது 2018-ம் ஆண்டு 24ஏஎம் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா கோவை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்ற 10 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் போனதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளது.
ஆர்.டி.ராஜா வாங்கிய கடனுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பான ‘ஹீரோ’வைத் தடை செய்வதற்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது.
டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ஆர்.டி.ராஜா ராஜா 10 கோடி ரூபாய் கடன் வாங்கும் போது, ஆர்.டி.ராஜாவின் நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் பெயரிடப்படாத திரைப்படங்களாக ‘தயாரிப்பு எண் 5, தயாரிப்பு எண் 6 மற்றும் தயாரிப்பு எண் 7’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வந்திருக்கிறது.
இவற்றுள் ‘தயாரிப்பு எண் 6’ திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்திரன் இயக்கி வந்துள்ளார். சுமார் 85% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தினை தன்னுடைய 24AM ஸ்டுடியிஸ் தயாரிப்பிலிருந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு ஆர்.டி.ராஜா கைமாற்றியுள்ளார் என்றும், ஆனால், வெளியில் இந்த ‘தயாரிப்பு எண் 6’ கைவிடப்பட்டு விட்டதாக ஆர்.டி.ராஜா பொய் சொல்லி விட்டார் என்றும் டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த காரணங்களைக் குற்றச்சாட்டாக குறிப்பிட்டு, டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம், ஆர்.டி.ராஜா, அவருடைய தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ், கடன் பத்திரத்தில் ஜாமீன்தாரராக கையொப்பமிட்டவர்கள் மற்றும் ‘ஹீரோ’ திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.கணேசன், 24AM ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் ‘தயாரிப்பு எண் 5’, ‘தயாரிப்பு எண் 7’ மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஹீரோ’ ஆகிய மூன்று படங்களையும் வெளியிட தடை விதித்துள்ளார்.
ஆனால், இது குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் எந்தப் பதற்றமும் காட்டிக்கொள்ளாமல், “டிவி, ரேடியோ, நியூஸ் எங்கே திரும்பினாலும் நம்ம நியூஸ்தான். இலவச பப்ளிசிட்டிக்கு நன்றி..! நமக்கு விசிறிகள் எல்லா பக்கமும் இருக்காங்க போல…
நம்ம பேன்ஸுக்கு நாம் சொல்லிக்கிறதெல்லாம் “டோன்ட் ஒர்ரி… படம் கண்டிப்பா டிசம்பர் 20ம்தேதி வருது..!” என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்..!
அத்துடன் 24 ஏஎம் ஸ்டூடியோஸுக்கு அறிவித்த தடை தங்களுக்கு செல்லாது என்றும், இப்படி தவறான தகவல்களைப் பரப்பினால் அது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் வழக்கறிஞர் மூலம் அறிவித்துள்ளது.
நல்லது நடந்தா சரி..!