March 22, 2025
  • March 22, 2025
Breaking News
March 9, 2025

படவா திரைப்பட விமர்சனம்

By 0 45 Views

கடைசியாக இப்படி ஒரு கலகலப்பான படத்தை எப்போது பார்த்தோம் என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட காலம் ஆகிறது என்பது மட்டும் உண்மை. 

முன்பாதிப் படம் முழுவதும் நாயகன் விமலும் காமெடியன் சூரியும் அடிக்கும் லூட்டிகள் வேற லெவல். சிரித்து மாளவில்லை.

தலைப்புக்கு ஏற்ற மாதிரியான வேடத்தில் வரும் விமல் எல்லாவிதமான படவாத் தனங்களையும் செய்கிறார். வேலை செய்தால் வியர்வை வந்துவிடும் என்று பயந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் விமலும், சூரியும்.

விமலின் உடன் பிறந்த அக்கா தேவதர்ஷினியே தம்பி தலையைப் பார்த்து விட்டால் படும் பாடு கொடும் பாடுதான். தேவதர்ஷினி மீன் வாங்குவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட விமல், அதை சமைத்துக் கொடுக்கும் வரை அங்கிருந்து நகராமல் இருப்பதும், தான் இருக்கும் வரை அக்கா சமைக்க மாட்டார் என்று அறிந்து அந்த மீனைத் திருடிக் கொண்டு போய் அக்கா வீட்டுக்காரரிடம் நல்ல விலைக்கு விற்று அவருக்கு வர வேண்டிய ஆர்டர் பணத்தையும் ஆட்டையைப் போட்டு அத்தனைக்கும் சரக்கு அடிக்கும் சுபாவம் விமலுக்கு.

தீபாவளியன்று எல்லோரும் வெடி வெடித்து தங்களுடைய சந்தோஷத்தை கெடுத்ததற்காக தீபாவளி இல்லாத தினத்தில் நடு இரவில் வெடி வெடித்து ஒருவரையும் தூங்க விடாமல் செய்யும் நல்ல உள்ளத்துடனும் விமல் இருக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊர் ஒன்று கூடி அவரை நாடு கடத்த முடிவு செய்கிறது. 

அதாவது ஊர் மக்கள் ஒன்று கூடி பணத்தைப் போட்டு அவரை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அங்கே ஆட்குறைப்பு நடக்கும்போது வேலை போக… மீண்டும் சொந்த ஊருக்கு வரும் விமலுக்கு அவரே எதிர்பாராத அளவில் வரவேற்பு கிடைக்க… ஏன் அந்த வரவேற்பு..? அதற்குப் பின் என்ன நடந்தது என்பதெல்லாம் பின் பாதிப்படத்தில் சொல்லப்படுகிறது. 

முன் பாதிப் படம் முழுவதுமே எந்தவிதமான சீரியஸ் பிரச்சனைகளைத் தொடாமல் சிரிப்பாகவே கடந்து விடுவதால் படம் முழுக்கவும் இப்படித்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இரண்டாவது பாதியில் சீரியஸ் பிரச்சனை ஒன்றைத் தொட்டுவிடும் இயக்குனர் கே.வி.நந்தா நாட்டுக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லி இருக்கிறார். 

கேரளத்தைப் போல் தமிழ்நாட்டிலும் விவசாயத்தை பாதிக்கும் ஒரு சீமைக் கருவேல மரம் கூட இருக்கக் கூடாது. மக்கள் ஒன்று கூடி அதை முற்றாக அகற்ற வேண்டும் என்பதே அந்தக் கருத்து. சீமைக் கருவேல மரங்கள் விளைந்த இடத்தில் மண் மலடாகிப் போய் விவசாயத்தை அது பாதிக்கிறது என்கிற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். 

அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 

எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றுவது என்பது விமலுக்கு கைவந்த அல்ல… அல்ல… கால் வந்த கலை. அதை முன் பாதியில் அசால்டாக செய்து விடுபவர் பின் பாதியில் சற்றே சீரியஸாக நடித்தும் பாராட்ட வைக்கிறார். 

வடிவேலுவுக்கு பின்வந்த காமெடியன்களில் சூரி மட்டுமே எல்லாக் காட்சியிலும் நம்மை சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்தவர். இந்தப் படத்திலும் அப்படியே. 

தமிழ்நாட்டுக்கு சூரி காமெடியனாக இருக்க மலேசியா சென்றுவிட்ட விமலுக்கு ராமரைக் காமெடியன் ஆகியிருக்கிறார்கள். ஆனால் அவர் சூரியின் அளவுக்கு சோபிக்கவில்லை. 

நாயகியாக நடித்திருக்கிறார் புதுமுகம் ஷ்ரிதா ராவ். நன்றாக நடிக்கிறார் – நடனமாடுகிறார். ஆனால் ஒரு நடிகையைப் போல் இல்லாமல் அடுத்த வீட்டுப் பெண் போல் தெரிவது பிளஸ் – ஆ, மைனஸ் – ஆ தெரியவில்லை.

விமலின் அக்காவாக வரும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன் இருவருமே கலகலப்பில் பங்கேற்கிறார்கள். 

வில்லனாகியிருக்கும் கே.ஜி.எப் ராம் முன்பாதியில் அமைதியாக வந்து பின் பாதியில் டெரர் முகம் காட்டுகிறார்.

ஒவ்வொரு பாடல் வரும்போதும் “அடடே… இதன் இசையமைப்பாளர் யார்..?” என்று கேட்கத் தோன்றும் அளவில் ஜான் பீட்டரின் இசை அமைந்திருக்கிறது. ஆர் ஆரும் அமர்க்களம்.

ஒரு கமர்சியல் படத்துக்கு ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டுமோ அதை மிகச் சரியாக… கலர் ஃபுல்லாகத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் 

கே.வி.நந்தாவின் இயக்கத்தில் குறைவில்லை. இது 90களில் வந்த படத்தைப் போலவே ஒன்றரை மணி நேரம் முன்பாதியைக் கொண்டு இரண்டரை மணி நேரம் ஓடுகிறது. ஆனால் நாம் இப்போது எல்லாம் ஒரு மணி நேரத்தில் இடைவேளை வந்துவிடும் அளவுக்கு பழக்கப்பட்டு விட்டதால் இதன் முன் பாதி சற்று நீளமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

சரியான நேரத்தில் வெளியாகியிருந்தால் சக்கைப் போடு போட்டிருக்கும். இப்போதும் கூட குறைவில்லாமல் ஓடும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

படவா – காமெடியும் கருத்தும் இதை விடவா..?

– வேணுஜி