வேற்று மொழிப்படத்தை இன்னொரு மொழியில் கொடுக்கும்போது இரண்டையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஆனாலும், ரீமேக் படம் தனியாகப் பார்த்தாலும் புதிய அனுபவத்தைத் தந்தால் அது வெற்றிப்படம்தான்.
இங்கே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக வந்த படத்தை இயக்குநர் கிரிசாயா தமிழில் கொடுத்திருக்கிறார். ஆனால், இவரே அர்ஜுன் ரெட்டியிலும் வேலை பார்த்தவர் எனும் விதத்தில் கண்டிப்பாக மேற்படி படத்தைக் கெடுக்க மாட்டார் நம்பிக்கையை விதைத்திருந்தார். அந்த நம்பிக்கையைத் தமிழில் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், எப்படிப் பார்த்தாலும் இது சீயான் விக்ரமின் புதல்வர் துருவ் விக்ரமை ஹீரோவாக நிறுவ வேண்டும் என்பதற்காகத் தயாரிக்கப் பட்டதால் அதுவே முதன்மை பெறுகிறது. அந்த விதத்தில் துருவ் தேறினாரா என்பதுதான் முதல் கேள்வி.
துருவ், மருத்துவக் கல்லூரியில் பயிலும் சிறந்த மாணவராக இருந்தாலும் அவரது கோபம் காரணமாக தனது பேராசிரியர்களிடம் நற்பெயரையும், அவப்பெயரையும் ஒருங்கே பெறுகிறார். அந்தக் கோபம் பொங்கி ஒரு மாதம் அவர் சஸ்பெண்ட் ஆக நேர, கல்லூரியை விட்டே வெளியேற முடிவு செய்யும் அவர் பனிதா சந்துவைப் பார்த்ததும் மனம் மாறி மீண்டும் கல்லூரியில் தொடர்கிறார்.
பனிதாவுடனான காதலில் அவர் கோபம் மாறி ஒரு புது மனிதனாகிறார். ஆனால், அந்தக் காதலுக்கு சாதி குறுக்கே வர, பனிதாவின் தந்தை இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பனிதாவின் தந்தையிடம் மீண்டும் துருவ்வின் கோபம் தலைகாட்ட, கூடவே போதையும் தலைக்கேறி தன்னை மாற்றிய காதலியையும் இழக்கின்றார்.
பனிதாவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆகி விட்டதை அறிந்து, முழு போதைக்கு அடிமையாகி கிட்டத்தட்ட காதலியை மறந்துவிட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு பனிதாவை மீண்டும் துருவ் சந்திக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை.
வழக்கமான காதல் கதையை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஐட்டமே இந்தப்படத்தில் வரும் துருவ்வின் கேரக்டரைசேஷன்தான். இப்படி ஒருவனுக்கு வந்த காதலை அவன் எப்படிக் கையாள்கிறான் என்பதுதான் இந்தப்பட வித்தியாசம்.
அதனாலேயே காதல் என்றால் தெய்வீகமெல்லாம் இல்லாமல் ஒரு தடவை என்றில்லாமல் பல நூறு முறை உறவே கொள்கிறார்கள் துருவ்வும், பனிதாவும். கூடவே படம் முழுதும் நீளும் துருவ்வின் கோபமும், போதைப் பழக்கமும் பயமுறுத்துகிறது. இந்த விஷயம்தான் இளைஞர்களைக் கவரும் என்று தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அதுவே துருவ்வின் நடிப்புக்கும் தீனி போடும் என்று தெரிந்தே இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
துருவ் விக்ரமுக்கு இந்த படம் முதல் படம் என்றால் சத்தியமாக நம்ப முடியாது. ஏற்கனவே இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் இதே படத்துக்காக மோல்ட் ஆனதுடன் ஒரிஜினல் படத்தின் கிரியேட்டிவ் டீமில் இருந்தவர் இயக்கியதும் துருவ்வை சரியான இடத்தில் ஒரு முழுமையான ஹீரோவாக ‘லாஞ்ச்’ செய்திருக்கிறது.
இளமை, முறுக்கு, கோபம், தாபம், வன்மம், அறிவு, அனுபவம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட நேர, அத்தனையிலும் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கி அப்பா பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் துருவ். இந்தப் பெயரை பிறந்தவுடன் அவருக்கு எப்படி சீயான் வைத்தாரோ பெயருக்கு ஏற்றவகையில் துருவ், சரியான துரு… துருவ்..! அந்த கிளைமாக்ஸ் வசனத்தில் தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்துகிறார் துருவ்.
நடிப்புத் திறமை கொண்ட எந்த ஹீரோவுக்கும் அவரது வாரிசு நடிக்க வருகையில் ‘என்ன இருந்தாலும், அப்பா போல் வரவில்லை…’ என்ற விமர்சனம் எழும். ஆனால், சினிமா வரலாற்றில் முதல் முறையாக அதை உடைத்துக்காட்டி தனது தந்தையை ஓவர்டேக் செய்து போட்டிக்கு அழைத்திருக்கிறார் துருவ். இனி இவருக்கான படங்களைப் பிடிப்பதுதான் ஆகப்பெரிய வேலையாக இருக்கும்.
இள உள்ளங்களுக்கு காதல் போதை ஏற்றும் வேலையை பனிதா சந்து பளிச்சென்று செய்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் தேவையான இடங்களில் தேவையைக் கொடுத்து பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார் பனிதா.
ஆனால், காதலை இனம் கண்டுகொள்ள பிரியா ஆனந்திடம் திருவ் மேற்கொள்ளும் காம ஆராய்ச்சியெல்லாம் கொஞ்சம் ஓவர். அதற்கு ஒத்துக்கொண்ட பிரியாவின் ‘தில்’லையும் பாராட்ட வேண்டும்.
நல்ல கிரியேட்டிவ் டீம் என்பதால் படத்தில் நடித்திருக்கும் லீலா சாம்சன், ராஜா, பகவதி பெருமாள், ப்ரியா ஆனந்த், அன்புதாசன் எல்லோரும் மனத்தில் பதிகிறார்கள்.
ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு கிளாஸ். ரதன் இசை பாடல்களிலும், பின்னணி இசையிலும் இளமை கூட்டுகிறது. விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு இன்னொரு ப்ளஸ்.
துருவ் விக்ரமை நல்ல நடிகராக ந்றுவ வேண்டும், அப்படியே இளைஞர்களைக் கவர்ந்து கமர்ஷியலாகவும் வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சிகளில் வெற்றியே கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் இப்படியெல்லாம் நாம் இருக்க மாட்டோமா என்று இளைஞர்கள் விரும்பும் படமாக இருந்தாலும் இது, இப்படியெல்லாம் இளைஞர்கள் இருக்கக்கூடாது என்ற வகையிலான படம் என்பதே உண்மை..!
ஆதித்ய வர்மா – சாதித்த வாரிசு..!
Related