சமீபத்திய முதல்வரின் பேச்சுக்கு நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியின் கமெண்ட் –
“தமிழக முதலமைச்சர் EPS அவர்களின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக சரியான சில விவரங்களை மறைப்பதும் தவறான தகவல்களை அறிவிப்பதும் ஆபத்து.
இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா இறப்புக்கள் நின்றுவிடும் என்பது பாசிட்டிவ் பேச்சு என்றால் ஓகே; ஆனால் அது நடக்காமல், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் நிலை வந்தால் ? கொரோனா பணக்காரர்கள் நோயா? விமானத்தில் மட்டும் வருமா?
முதலில் கொரோனா உண்டானதே எளிய மக்கள் புழங்கும் ஜனசந்தடி நிறைந்த சீன விலங்கு சந்தையில் என்பதை நினைவில் கொள்க. அதோடு, விமானத்தில் வருபவர்கள் எல்லோருமே செல்வந்தர்கள் என்பதும் இல்லை.
வளைகுடாவிலிருந்து விமானத்தில் கேரளா வந்த கடத்தல் குருவிகள் , இந்தோனேசியா மத போதகர்கள் பணக்காரர்களா? அவர்களோடு நின்றதா? அடுத்து டெல்லியில் ஒரு வாட்சமனுக்கு வந்து, அவரிடமிருந்து வீட்டு முதலாளி குடும்பத்தினருக்கு தொற்றியுள்ளது.
பணக்காரர்களை மட்டும் தாக்கும் நோயா என்றால், இல்லை. இது பணக்காரர்களையும் தாக்கும் நோய் , பட்டினிக்காரர்களையும் தாக்கும். நடுத்தற வர்க்கத்தையும் தாக்கும். பக்கிங்காம் அரண்மனையிலும் பரவிவிட்டது, தாராவியிலும் வந்துவிட்டது. நோயாளிகளை கவனிக்கும் டாக்டர்களுக்கு தொற்றுகிறது.
ஆனால், எல்லா நோய்களையும் போல, நல்ல மருத்துவமனை வசதி, உயர்தர சிகிச்சை, எல்லாமே பணக்காரர்களுக்கு கிடைத்து விடும். எப்போதும் போல, நோயின் தீவிரம் ஏழைகளை தான் அதிகம் சோதிக்கும்.
EPS அவர்கள் பணக்காரர் என்று யாரை எதற்கு சொன்னார் என்பது வேறு விஷயம். அதனால், முதல்வரே சொல்லிவிட்டார், கொரோனா பணக்கார நோய் , நம்மை தாக்காது என்று ஏழை எளிய மக்கள் தவறாக எண்ணி அசட்டையாக இருந்துவிட கூடாது.
அரசும், மதம் பணம் மொழி என்றெல்லாம் அரசியல் நோக்கோடு பார்க்காமல் எங்கெங்கே யாருக்கு தொற்று உள்ளது என்ற விவரங்களை தெளிவாக பதிவு செய்வதன் மூலம் மட்டுமே மக்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்…”