படத்தின் தலைப்பையும் விஜய் ஆண்டனி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் படத்தின் புகைப்படத்தையும் பார்த்தால் கண்டிப்பாக ஒரு நெகிழ்ச்சியான கதையை உள்ளே வைத்திருப்பார்கள் என்றுதான் தோன்றியது.
ஆனால், படத்தின் லைன் மிகவும் நெகிழ்ச்சியானது தான். பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடியொற்றி இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.
ஆனால் திரைக்கதையும் படத்தின் தரமும் அந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா..? அங்கேதான் படம் பல்டி அடித்து விட்டது.
கைக்குழந்தையுடன் தனிமைப்பட்டு இருக்கும் நாயகன் விஜய் ஆண்டனி அந்த குழந்தையுடன் ஊட்டிக்குச் செல்கிறார். “இவள் தான் உன் அம்மா..!” என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியே அந்தக் குழந்தையை வளர்க்கிறார்.
ஆனால் ஊட்டியில் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை அவர் பார்க்க நேர்கிறது. அவளைப் பார்த்து அவர் பதறுகிறார். ஆக அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் பிறந்த குழந்தைதான் அவர் வளர்க்கும் சிறுமி என்று நீங்கள் நினைத்தால் அது எல்லாமே இல்லை.
இன்னொரு பக்கம் அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி, எந்த நோக்கமும் இல்லாமல் விஜய் ஆண்டனியை காதலிக்கிறார். இதற்கும் வீட்டில் பிரீத்தியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரது அம்மா பல மாப்பிளைகளை பார்த்தும் அவர்களை எல்லாம் எந்தக் காரணமும் இல்லாமல் மறுத்தும் வருகிறார்.
இந்நிலையில் திடீரென்று அந்தச் சிறுமி நோய்வாய் படுகிறாள். பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். அதாவது குழந்தையின் பெற்றோர் மூலம் இன்னொரு குழந்தையை உருவாக்கி அந்த குழந்தையின் செல்களை வைத்து இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அப்படியானால் விஜய் ஆண்டனியும் அந்த முன்னாள் காதலியும் சேர்ந்து இன்னொரு குழந்தையை உருவாக்குவார்களா என்று தானே கேட்கிறீர்கள்..?
அதுவும் இல்லை. அதற்கு மேல் சிக்கலாக போய்க் கொண்டிருக்கிறது கதை. அந்த இடியாப்ப சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வழியாக முடிவுக்கு வருவதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுகிறோம்.
முதல் பாதி முழுக்க நிறைய ஏன் என்ற கேள்விகளை செருகி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு பின்பாதிக்கதை பத்தாது என்கிற அளவில் பின் பாதியில் இன்னும் கதைகளை கோர்த்துக் கொண்டே போய் எங்கேதான் இந்த படம் முடியப்போகிறது என்கிற அலுப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.
வழக்கமாகவே நல்லவராக வரும் விஜய் ஆண்டனி அந்த வழக்கத்தையும் மீறி ரொம்ப நல்லவராக வலம் வருகிறார். நேரில் எப்படி நடிக்கிறாரோ அப்படியே படத்திலும் இருக்கிறார். இரண்டாவது பாதியில் பார்க்கிற ஒவ்வொருவரையும் பார்த்த அவர் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிடுவதும் காலில் விழுவதுமாக இருப்பதை பார்த்தால் நமக்கே பாவமாகிவிடுகிறது.
நாயகி பிரீத்தி அஸ்ரானி பார்வைக்கு அத்தனை அழகாக இருக்கிறார். ஆனால் எதனைக் கண்டு விஜய் ஆண்டனி மேல் காதல் கொள்கிறார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத உண்மை. ஒரு கட்டத்தில் இருக்கிற ஆசிரியை வேலையையும் விட்டுவிட்டு அம்மாவையும் அம்போ என்று விட்டுவிட்டு விஜய் ஆண்டனியிடம் இருக்கும் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்க ஊரை விட்டு கிளம்பி விடுவதெல்லாம் ஓவர் அபத்தம்.
விஜய் ஆண்டனியின் மகள் போல நடித்திருக்கும் சிறுமி லிதன்யாவின் நடிப்பு பிரீத்தி, விஜய் ஆண்டனி எல்லோரையும் மிஞ்சி விடுகிறது. கிளைமாக்ஸ் முந்தைய காட்சியில் அவர் நடிக்கும் நடிப்பு ஒன்றுதான் படத்தில் உருப்படியான ஒரே விஷயம்.
இவர்களுடன் பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லக்ஷ்மணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம்.ஆர் இவர்களெல்லாம் படத்தை நீட்ட உதவியிருக்கிறார்கள்.
நல்ல காமெடியனான ஜென்சன் திவாகர் இருந்தும் படத்தின் முதல் பகுதி அவ்வளவு வறட்சியாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதேபோல் இரண்டாவது பாதியில் படம் சீரியஸான கட்டத்தை எட்டும் போது முருகானந்தம் செய்யும் காமெடிகள் படத்துக்கு தேவையே இல்லை.
படத்தின் களமாக ஊட்டி இருந்தும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் தோற்ற படம் இதுவாகதான் இருக்கும். 80களில் படம் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவர் ஸ்டைலிலேயே இருக்கிறது. புதிதாக எதுவும் இல்லை.
படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் விஜய் ஆண்டனி, அதிகமாக தோற்றது அந்தப் பொறுப்பில்தான். படத்தில் அவ்வளவு முரணான குழப்பங்கள்.
எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், எடுத்துக்கொண்ட லைன் அருமையானது. ஆனால் இந்தக் காலத்தோடு ஒட்டாத வகையில் திரைக்கதை, காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் இன்ன பிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டதால் எந்தக் காலகட்டத்தில் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே மறந்து போய்விடுகிறது.
அப்பா குட்டி – அவுட் டேட்டட்..!
– வேணுஜி