உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி தொற்றான ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2600 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவு தெரிவித்துள்ளது. இது கொரோனாவால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் அறிவியல் ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பது முற்றிலும் முரணானதாக உள்ளது.
விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது.
ஒரு வேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் நிச்சயம் வேகம் எடுக்கும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்வர்ட் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.