சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசாக உள்ள நிலையில் இந்த 100% காதல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கடலோர கவிதைகள்’ ரேகா பேசியதிலிருந்து…
“இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படறேன்.
ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் எனப் பலரும் பஞ்ச் வசனங்கள் பேசுவாங்க. நான் பஞ்ச் வசனங்கள் பேசும் அளவுக்குப் பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட ‘உம்’முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட ‘கம்’முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.
ஆனால், போன ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து என்னைப் புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் எட்டிப் பார்ப்பது போல் டிசைன் செய்து நான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவி வருது. எனக்கு ஒன்றுமேயில்லை. நான் நல்லாதான் இருக்கிறேன். இப்பல்லாம் பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் யூ-டியூப் சேனல் தொடங்கி, அதில் தேவையில்லாத விஷயங்களைப் போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள். இது எந்த நிலைக்குப் போகும் எனத் தெரியலை.
இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிரபலங்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும் போது பிரபலங்களை விட அவர்களைச் சேர்ந்தவர்களை ரொம்பவே வருத்தப்பட வைக்கும். என்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துவிட்டாயா’ எனக் கேட்டாய்ங்க. “ஆமாம்மா ஆமா .. இப்போ பேய் தான் பேசுகிறேன்…” எனச் சொன்னேன்.
இப்படி ‘இறந்துட்டீங்களா’ என்பதை என் தொலைப்பேசியிலேயே அழைத்துக் கேட்கிறாங்க. எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு. என் செய்தி தொடர்பான வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்காங்க . இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் இறந்துட்டா, அதை எட்டிப் பார்ப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.
இப்படி நம்ம இறந்துட்டோம் அப்படீன்னு நாமளே விளம்பரப்படுத்துவோமா?. நான் செத்துப் போய் விட்டேன் என்று நானே எப்படிச் சொல்ல முடியும். இதை எல்லாம் கேட்காமல் இருப்பதால்தான், அதை வைத்து பணம் பண்ணுறாங்க. நான் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்.
100 படங்களைத் தாண்டிவிட்டாலும் இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது..!”