July 25, 2026
  • July 25, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்

By on July 26, 2026 0 1 Views

தமிழக முதல்வரான பின் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படமும், நடிகராக அவரது நடிப்பில் அமைந்த கடைசி படமும் இதுவாக இருக்க மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம்.

கதை இதுதான்.

ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார் விஜய். அவரது திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஜெயிலர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவியால் இறக்கும் தருவாயில் உள்ள அம்மாவை சந்திப்பதற்காக வெளியே வருகிறார்.

சட்டத்தை மீறி தன்னை வெளியே அனுப்பிய கௌதம் வாசுதேவன் மேனன் மேல் மரியாதை கொண்ட விஜய், அவரது மகள் மீதும் அன்பு காட்டுகிறார். இந்நிலையில் விபத்தில் கெளதம் மேனன் இறந்து போக, அவர் மகளான நமீதா பைஜூவை தன் மகளாக நினைத்து விஜய் வளர்க்கிறார்.

மவிதா பைஜுவின் வாழ்க்கை கனவை நிறைவேற்ற விஜய் சபதம் கொள்ளும் நிலையில் மமிதா பைஜூக்கு ஒரு பிரச்சனை வருகிறது.

அதே நேரத்தில் யாரை கொலை செய்ததற்காக சிறைக்கு சென்றாரோ அந்த பாபி தியோல் உயிருடன் இருப்பதும், அவரால்தான்l மமிதா பைஜூவுக்கு பிரச்சனை வந்தது என்பதையும் விஜய்  அறிந்து கொள்கிறார்.

இவர்கள் இருவருக்குமான பிளாஷ் பேக் என்ன ?, இறந்த பாபி தியோல் மீண்டும் வந்தது எப்படி, அவரது புதிய திட்டம் என்ன ?, அதை விஜய் எப்படி முறியடித்தார் ? என்பதை கலர்புல் கமர்ஷியல் அம்சங்களோடும், அரசியல் பிரச்சாரங்களோடும் சொல்வது தான் ‘ஜன நாயகன்’.

 

விஜய் வழக்கம் போல் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக நடித்திருந்தாலும், தனது ரொமான்ஸ் குறும்புத்தனம் மற்றும் காமெடி காட்சிகளை கைவிட்டுவிட்டு, அரசியல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், பஞ்ச் வசனம் பேசும் காட்சிகளிலும் திரையரங்கையே அதிர வைக்கிறார்.

 

பூஜா ஹெக்டே நாயகி என்ற அந்தஸ்த்துடன் வலம் வந்தாலும், அவருக்கு டூயட் பாடல் இல்லை, காதல் காட்சிகளும் இல்லை. படம் முழுவதும் ஸ்லீவ்லெஷ் ஜாக்கெட்டுடன் வலம் வருவது மட்டுமே அவரது வேலை. சில இடங்களில் திரைக்கதையோடு பயணிப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும் காட்சிகளில் திணிக்கப்பட்டிருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் மிரட்டுகிறார். நேர்மையான அதிகாரியாக இருந்து வில்லனாக உருவெடுக்கும் அவருக்கான பிளாஷ் பேக் காட்சிகள் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

 

விஜயின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜூ, துள்ளல் நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சித்தா என்று விஜயை செல்லமாக அழைக்கும் காட்சிகளிலும், அவரிடம் இருந்து விலக நினைக்கும் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் என அனைவரும் சிறிய அளவில் முகம் காட்டியிருந்தாலும், தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாலர் சத்யன் சூரியன் காட்சிகளை கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பது, வீடியோ கேம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

 

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். தளபதி கச்சேரி பாடல் விஜய் ரசிகர்களுக்கான உற்சாக டானிக்காக அமைந்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், முதல் பாதி படத்தை பொழுதுபோக்காக நகர்த்தி சென்று பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் இடம்பெறும் பல்வேறு கிளைக்கதைகளை நேர்த்தியாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார். இதனால், படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடைய செய்து விடுகிறது.

 

தெலுங்குத் திரைப்படம் ‘பகவந்த்கேசரி’-யின் தழுவல் என்றாலும், முதல் பாதி வரை அப்படத்தை அப்படியே எடுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், இரண்டாம் பாதியில் படத்தை விஜய் மற்றும் அவரது தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு ஓரமாக உட்கார்ந்து விட்டார் போலியிருக்கிறது.

 

கைதி, அப்பா, வனக்காவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், தேசத்தின் பாதுகாவலர் என விஜய்க்கு பல அவதாரங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், ஒன்றை கூட உணர்வுப்பூர்வமாகவும், அழுத்தமாகவும் எழுதவில்லை. முழுக்க முழுக்க விஜயின் தேர்தல் பிரச்சார படமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை கூட ஒரு நேர்கோட்டில் சொல்லாமல், பலவித குழப்பங்களோடு அரைகுறையாக சொல்லி சொதப்பியிருக்கிறார்.

 

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதோடு, அவை அனைத்துமே வீடியோ கேம் பாணியில் பயணிப்பதால், கிளைமாக்ஸ் நெருங்கும் போது, இந்த விளையாட்டு எப்போது முடியுமோ…!, என்று பார்வையாளர்களை ஏங்க வைத்து விடுகிறது.

 

விஜயின் கடைசிப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் பல காட்சிகளை திணித்திருகிறார். தேவையில்லாத இடங்களில் திடீரென்று வரும் அந்த காட்சிகள் திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்து படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

 

தளபதி கச்சேரி பாடல் வரை, ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக நகர்ந்தாலும், அப்பாடலுக்குப் பிறகு சினிமா ரசிகர்களுக்கான படமாகவும் இல்லை, விஜயின் அரசியலுக்கான படமாகவும் இல்லை.

 

மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ சினிமா ரசிகர்களின் வில்லன்.