வாழ்வில் பயணமும், காதலும் என்றுமே அலுக்காதவை. அதிலும் பயணத்தில் ஒரு காதலைக் கண்டுபிடிப்பது அதீத இன்பம் தரும் அனுபவம். இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன்.
அப்படி காதல் மற்றும் வாழ்வில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தன் கடந்தகால தோழமைகளைத் தேடி ஒரு துரிதப் பயணம் மேற்கொள்கிறார் நாயகி பூர்ணிமா ரவி. அந்த அனுபவங்கள்தான் கதை.
சின்னத்திரை மற்றும் யூடியூப் வழியாக பூர்ணிமா ரவி நமக்கு நன்கு அறிமுகமாகி இருந்தாலும், இதில் தான் முதல் நிலை நாயகி அளவுக்கு அவர் உயர்ந்திருக்கிறார். அதற்கு மிக்க தகுதியாகவும் இதில் பங்காளித்திருக்கிறார். முதல் காதலனை பிரியும் தருவாயில் அவர் பார்க்கும் அந்த ஆழமான பார்வையில் காதல் தோல்வி நம் நெஞ்சை சுடுகிறது.
தேவைக்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிகச் சரியாக நூல் பிடித்தது போல் நடித்து கவனத்தை கவர்ந்திருக்கும் பூரணமா ரவிக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
கிட்டத்தட்ட பாதி படத்துக்கு வந்தாலும் வைபவ் முருகேசன், மனதில் நிறைகிறார். இயல்பான நடிப்பில் கவரும் அவர், பூர்ணிமாவைக் கவர்ந்தது ஆச்சரியமில்லை.
பூர்ணிமாவின் கேரளத் தோழி நமிதா கிருஷ்ணமூர்த்தியின் தோற்றமும், நடவடிக்கைகளும் வேற லெவல். ஆனால், அவர் சொல்வதை வேதவாக்காக பூர்ணிமா எடுத்துக் கொள்வது அறம் இல்லாத செயல்.
டெல்லி கணேசுக்கு இது கடைசிப் படமாக இருக்கக் கூடும். அவரும் முத்திரை பதித்திருக்கிறார்.
இவர்களுடன் சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன் உள்ளிட்டோர் தத்தம் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.
சென்னை தொடங்கி கேரளா, கோவா என்று தொடரும் பாத்திரங்களின் பயணத்தை நம்மையும் உணரச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்.
கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்களும் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசையும் காதலுக்குக் கட்டியம் கூறுகின்றன.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன், ரசித்து ரசித்து காட்சிகளையும், உரையாடல்களையும் எழுதி இருக்கிறார்.
ஜென் சீ ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்கும்.
‘யெல்லோ’ – கிரீன் சிக்னல்..!
– வேணுஜி