கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. அதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பெறப்பட்டதை அடுத்து குமாரசாமி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. அதனை ஏற்ற ஆளுநர் ஆட்சியமைக்க எடியூரப்பாவை அழைத்தார்.
அதன்படி இன்று (26-07-2019) மாலை மாலை 6.05 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பதற்காக எடியூரப்பா வந்தார். 6.30 மணியளவில் கவர்னர் பதவி ஏற்பு விழா மேடைக்கு வர, தேசியக் கீதத்துடன் விழா தொடங்கியது. 6.32 மணிக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க பதவிப் பிரமாணம் செய்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் எடியூரப்பா.
பதவியேற்ற பின் “கர்நாடக சட்டப்பேரவையில் ஜூலை 29-ம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன்..!” என்று செய்தியாளர்களிடம் கூறினார் எடியூரப்பா.