ஏற்கனவே வில்லு என்ற படம் வந்தது… இது என்ன வில் என்று யோசிக்காதீர்கள். இது ஆங்கில ‘ வில்’ – தமிழில் உயில் .
அப்படி ஒரு உயில் பற்றிய வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி ஒரு பெரிய மனிதர் தன் சொத்துகளை தான் வாரிசுகள் இருவர் பெயரில் எழுதி வைப்பதுடன் வெளியூரில் உள்ள வீட்டை யாரோ ஒரு பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார்.
யாரோ ஒரு பெண்ணிடம் தங்கள் சொத்து போவதை விரும்பாத வாரிசுகள் பொய்யாக ஒரு பெண்ணை சாட்சியாக ஆக்கி அந்த சொத்தை அடைய நினைக்க, சந்தேகம் கொண்ட நீதிபதி உண்மையைக்.கண்டறியும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைக்க, அதை ஏற்கும் எஸ் ஐ, அந்தப் பெண்ணைக்.கண்டுபிடித்து உண்மையை.உலகுக்கு உணர்த்துவதுதான் கதை.
இதில் நீதிபதியாக சோனியா அகர்வால் வருகிறார். அதற்கு நியாயம் சேர்க்க நினைத்தாலும், நீதிபதி என்ற தகுதியை விட நடிகையாக இருக்கும் தகுதியே பெரிது என்று முழு ஒப்பனையிலும் நடிப்பிலும் உணர்த்துகிறார்.
கதையில் யாரோ ஒரு பெண்ணாக வந்தாலும், அதை ஏற்றிருக்கும் அலக்கியாதான் முழுக்கதையைத் தாங்குகிறார்.
வழக்கமான நடிகைக்கான முகவெட்டு இல்லா விட்டாலும் ஏற்ற பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறது அவர் நடிப்பு. ஆனால், இப்படி ஒரு பாத்திரத்தை வேறு எந்த நடிகையாவது ஏற்பாரா என்று தெரியவில்லை. அந்த வகையில் அலக்கியாவின் தைரியம் பாராட்ட வைக்கிறது.
சப் இன்ஸ்பெக்டராக விக்ராந்த் நடித்திருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் முக்கிய பாத்திரம் என்பதும், அதில் அவரது பங்களிப்பும் சிறப்பு.
தெலுங்கும் தமிழும் கலந்து பேசும் அந்த தொழிலதிபர் பாத்திரம் விசித்திரமானது. அதை ஏற்று நடித்திருப்பவர் அதில் சரியாகப் பொருந்தி இருக்கிறார்.
பிற வேடங்களில் நடித்திருப்பவர்களை அடையாளம் தெரியவில்லை என்றாலும் பாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வுகள்.
பொறுமையாக கதை நகர்வதால் செளரப் அகர்வால் இசைக்குப் பெரிய வேலை இல்லை. பாடல்கள் பரவாயில்லை.
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவும் தேவையை நிறைவு செய்து இருக்கிறார்.
இப்படித்தான் கதை மெதுவாக நகர வேண்டும் என்று படத்தை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன் ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் படத்தொகுப்பாளர் ஜி.தினேஷ் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியவில்லை போலிருக்கிறது.
நீதிமன்ற காட்சிகள் வரும்போது பரபரப்பாகும் திரைக்கதை மற்ற நேரங்களில் சுணங்கி விடுகிறது. அதையும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் மனதில் பதிகிறது.
வில் – நியாயமான தீர்ப்பு..!
– வேணுஜி