முன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள்.
இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். சொந்தத்தொழில் ஆரம்பிக்க கடன்பட்டு கூடவே காதல் வயமும் பட்டு திருமணம் கூடி வரவிருக்கும் நேரம் நிச்சயதார்த்தம் அன்று வாங்கிய கடனைக்கொடுக்காவிட்டால் மானம் போய்விடும் என்ற நிலைமையில் இருக்கிறார்.
அத்தனை வழிகளிலும் முயற்சி செய்து தோற்ற அவர் இடையில் இருக்கும் ஒரு இரவுக்குள் பணம் புரட்ட வேண்டிய அவசியத்தில் ஆளில்லாத ஒரு பணக்கார வீட்டில் கொள்ளையடிக்க நினைக்கிறார். அங்கே ஒரு நாய் மட்டும் இருக்க, அந்த நாய் ஜி.வி.பிரகாஷை வெளியே துரத்தாமல் உதவிகள் செய்து அவரை வீட்டுக்குள் போகச் செய்கிறது. வீட்டுக்குள் போனால் அங்கே ஒருவர் இறந்து கிடக்கிறார்.
தொடர்ந்து அவரை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சிக்க, இன்னொருவர் அவரைக் காப்பாற்றுகிறார். எல்லாமே இருளில் நடக்கிறது. சுட்டவர் யார், காப்பாற்றியவர் யார், அந்த நாய் ஜி.வி.பிரகாஷுக்கு ஏன் உதவி செய்தது என்பதையெல்லாம் ஒரு த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் விஜய்.
விஜய் படமென்றாலே மேக்கிங் அருமையாக இருக்கும். இதிலும் அப்படித்தான். முழுப்படமும் இருளிலேயே நடக்க, அதை சலிக்காமல் பார்க்க வைக்க, நிரவ் ஷா – சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உதவி புரிகின்றன.
கிட்டத்தட்ட பாதிப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மட்டுமே இருக்கிறார். அதனால் அவர் நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அதிலும் அரை இருளில் எக்ஸ்பிரஷன்களைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் தொட்டதற்கெல்லாம் கீழே விழுந்து அடி பட்டாலும், கிளைமாக்ஸில் இரண்டு தீவிரவாதிகளை வீழ்த்தி ஹீரோயிஸத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்.
ஹீரோயினாக வரும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு போன் பேசுவதைத் தவிர வேறு வேலையில்லை. அட… ஜிவியும் அவரும் காதலித்ததைக் காட்ட ஒரு டூயட்டாவது வைத்திருக்கலாமே டைரக்டர் சார்..?!
முக்கியப் பாத்திரமேற்கும் சுமனுக்கும் இருந்த இடத்தைவிட்டு அசைய முடியாத கேரக்டர். அவரும் நடிப்பால் அடையாளம் தெரிய முயற்சிக்கிறார்.
அங்கங்கே கலகலப்பூட்ட யோகிபாபு வருகிறார். முனிஸ்காந்த்தும் இருக்கிறார். இருவரையும் இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாம்.
இவர்களுடன் ‘புரூனோ’ என்ற நாயும் நடித்திருக்கிறது. பார்க்கப் போனால் இந்த புரூனோதான் படத்தின் ‘யுஎஸ்பி’யே என்றிருக்க, அந்த நாயின் செயல்பாடுகளையும் இன்னும் பயன்படுத்தியிருக்க முடியும். படத்தில் புரூனோ வரும் காட்சிகளை குழந்தைகள் ரசிப்பார்கள். வில்லனாக வரும் ராஜ் அர்ஜுனின் முடிவும் நமக்கு முன்பே தெரிந்துவிடுகிறது.
ஒரே இடத்தில் சுற்றிவரும் கதையாக இருக்க, பாடல்களை வைத்து அதை சுவாரஸ்யப்படுத்தியிருக்க முடியும். ஜி.வி.பிரகாஷ் கையில் இருக்க, பாடல்களுக்கும் ஏன் விஜய் ‘தடா’ விதித்தார்..? அந்தக் குறையை உணர்ந்தே பட முடிவில் சாயிஷாவை ஆடவைத்து ஒரு பாடலை இணைத்திருக்கிறார்கள். அதை படத்தின் நடுவிலேயே வைத்திருக்கலாம்.
வாட்ச்மேன் – குழந்தைகளையும், அவர்களை அழைத்துப் போக வேண்டியிருப்பதால் பெற்றோரையும் கவரும்..!