படத்தைக் காமெடியாக எடுக்கலாம், ஆனால் படம் எடுப்பதையே காமெடியாக ஆக்கிவிடக்கூடாது அல்லவா..? இதை உணர்த்துகிறது இந்த ‘டார்க் காமெடி’ப் படம்.
இந்தப்படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குனர் வெங்கி, லோகேஷ் கனகராஜிடம் சினிமா பயின்றவர் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன் காமெடி சதீஷ், ஹீரோவாகி இருக்கும் மூன்றாவது படம் இது.
சிறு வயது சதீஷ்(களில்) ஒருவர் “ஏமாற்றுவது தவறு” என்றும், “ஏமாற்றுவது தவறு அல்ல… ஏமாறுவதுதான் தவறு…” என்று இன்னொருவரும் கொள்கையுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
சரி… இந்த கான்செப்ட் டில்தான் திரைக்கதை போகும் போலிருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றுவது தவறு என்கிறவரை ஆளையே காணோம்- ஆனால் ஏமாற்றுவது தவறில்லை என்கிற சதீஷ் மட்டும் வளர்ந்து தங்கம், வைரம் என்றெல்லாம் கொள்ளை அடிக்கிறார்.
அதற்கு அவர் டார்கெட் செய்வது மூன்று தாதாக்களை. ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதன் இந்த மூன்று பேர்தான் அந்த தாதாக்கள். மூவரும் சிறுவயதில் ஒரு சேட்டிடம் கடத்தல் வேலைகளைக் கற்று பின்னர் அந்த சேட்டையே போட்டுத் தள்ளி தங்கள் சொந்த சேட்டையை ஆரம்பித்தவர்கள்.
வளர்ந்ததும் தனித்தனியாக தொழில் செய்யும் அவர்களிடம் சதீஷ் சென்று ஒவ்வொரு பேரமாக பேசி சில கொள்கைகளை இடுகிறார்.. அந்த முட்டாள் தாதாக்கள் அதுவரை எப்படித்தான் சர்வைவ் ஆனார்கள் என்று தெரியாத அளவுக்கு சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட சதீஷ் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களிடம் இருக்கும் அல்லக்கைகள் அவர்களை விட மோசம். ஆனால் இது காமெடிப் படம் என்பதால் எல்லாவற்றையும் காமெடியாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
கதை என்று ஒன்று இருப்பதைப் பற்றி இயக்குனரே அலட்டிக் கொள்ளாத போது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்..? மேற்படி விஷயங்களை துணுக்குத் தோரணங்களாகக் கட்டி அங்கங்கே சிரிக்க வைப்பது மட்டும்தான் முழுப் படத்தையும் கொண்டு சென்றிருக்கிறது.
அதில் நாயகன் சதீஷை விட ஆனந்தராஜ் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
அவரிடம் ஒரு அல்லக்கையாக அவரது தம்பி எனப்படும் நேபாளி பிரீடில் ஒருவர் இருக்க, அவனை வைத்துக்கொண்டு அவஸ்தைப்படும் போது, “எங்க அப்பா ரெண்டு நாள் நேபாளம் போனான்… அந்த கருமத்துக்காக உன்னை எல்லாம் வெச்சு நான் காப்பாத்த வேண்டி இருக்கு..!” என்று ஆனந்தராஜ் புலம்புவது அல்டிமேட்.
அதேபோல் சுப்பிரமணிய சிவா அண்ட் கோ இரண்டாவது தடவையாக பாதுகாப்பு படையிடம் மாட்டும்போது சுப்பிரமணிய சிவா அவர்களிடம், “நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… எங்கள புடிக்கிறது விட்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?” என்று நொந்து கொள்வதும் அந்த ரகம்.
ஆனால் மதுசூதன் சைடில் சாம்சை விட்டால் காமெடிக்கு ஆள் இல்லை.
ஆனந்தராஜ், மதுசூதன் கோஷ்டிகள் ஏர்போர்ட் டாய்லெட்டில் வைத்து செய்யும் காமெடிகள் படத்தின் ஹைலைட்.
சரி… ஹீரோ சதீஷ் என்னதான் செய்கிறார் என்கிறீர்களா..? இவர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் ஏமாறுவது போல் நடித்து அந்தக் கொள்ளைப் பொருள்களை ஆட்டையை போடுகிறார் சதீஷ்.
அதையெல்லாம் வைத்து என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு உருக்கமான ஒரு பிளாஷ் பேக் சொல்கிறார் அவர். ஆனால், அதுவும் ஒரு கட்டத்தில் பொய் என்று ஆகிவிடுகிறது.
இன்னும் மேடை நாடக பாணியிலேயே காமெடி செய்வதை சதீஷ் தவிர்த்து உருப்படியாக ஏதாவது நடிக்க ஆரம்பிக்கலாம். இதில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் என்ற பெயரில் கையையும் காலையும் தூக்கி தூக்கி அவர் உதறிக் கொண்டிருப்பது நல்ல காமெடி.
நாயகி சிம்ரன் குப்தா AI – யில் செய்யப்பட்ட பொம்மை போல வந்து போகிறார். அவர் ஒரு ஜர்னலிஸ்ட் என்று புரிந்து கொள்ளவே நமக்கு பாதிப்படம் ஓடி விடுகிறது.
அதேபோல் பட ஆரம்பத்தில் சதீஷ் ஒரு மேஜிசியன் என்கிறார்கள். ஆனால் மொத்தப் படத்திலும் அவர் ஒரு மேஜிக்கும் செய்யவில்லை.
மறைந்த மாரிமுத்து ஒரே ஒரு காட்சியில் வந்து இயல்பை போலவே மாரடைப்பால் இறந்து போகிறார். (What a cruel co incidence..?)
ஜான் விஜய் தன் இயல்புப் படியே ரவுடி போலீசாக வருகிறார் அவருக்கும் ஒரு காட்சி தான்.
வெங்கட் பரத்தின் இசையும், ஒளிப்பதிவும் ஒரு நல்ல படத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக நம்மை நம்ப வைக்கின்றன.
சரி… பட ஆரம்பத்தில் சதீஷ் ‘ரெட்டையர்களாக வந்தாரே, அதைப்பற்றி எதுவும் கதையில் இருக்கிறதா..?’ என்று பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தாலும் தெரியவில்லை.
ஆனால் படத்தை அப்படி ஆரம்பித்து விட்டோமே என்று படம் முடியும்போது ஒரு சதீஷ் இன்னொரு சதீஷ்க்கு போன் செய்வதாகக் காட்டி கணக்கை செட்டில் செய்து விடுகிறார் இயக்குனர்.
சில படங்களில் லாஜிக் இருக்கும்… சில படங்களில் மேஜிக் இருக்கும் – ஆனால், லாஜிக்கோ, மேஜிக்கோ இல்லாத இந்த…
வித்தைக்காரன் – லொஜக்… மொஜக்..!