ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் பிறந்த தினம் வந்தது. அன்றைக்கு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு கேக் பரிசளித்து பட்டாகத்தியால் வெட்ட வைத்தார் இயக்குனர் பொன்ராம்.
அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அத்துடன் அப்படி பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் என்று பல இடங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.
சில வருடங்களுக்கு முன்னால் இதே போல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டு இதைப்போல் எல்லோரும் கொண்டாட ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று எழுந்த விமர்சனத்தை அடுத்து மீடியாக்கள் மூலம் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
அதன் பிரதி கீழே…
வணக்கம்,
எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.
இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.
அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.
நன்றி
விஜய் சேதுபதி