ஊட்டியில் காதலர்களான அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் பைக்கில் செல்லும் போது யாரோ சிலரால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார். அசோக் செல்வன் பிழைத்துக் கொள்கிறார்.
இது நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் காதலி ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இருக்க எழுத்தாளரான ஜனனி அவர் வீட்டில் வந்து தங்கி அசோக் செல்வனின் அனுபவங்களை ஒரு கதையாக எழுதுகிறார். அசோக்கின் பழிவாங்கும் குணத்தையும் மாற்ற முயல்கிறார்.
ஒரு நாள் குன்னூருக்குச் சென்ற போது ஐஸ்வர்யாவைக் கொன்றவர்களில் ஒருவனை அடையாளம் காண்கிறார் அசோக். அவனைத் தொடர்ந்து சென்ற போது மேலும் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இன்றைய இளம் ஹீரோக்களில் எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் பொருந்திப் போகிரார் அசோக் செல்வன். நம்பியவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் துரோகிகளாக இருக்க, அவர் படும் பாடு பரிதாபம் சேர்க்கிறது.
ஐஸ்வர்யா மேனன் கொஞ்ச நேரமே வந்தாலும் இயல்பான நடிப்பால் மனதைக் கொள்ளை கொள்கிறார். அப்படி ஒரு காதலியை இழப்பது என்பது கொடுமையான தண்டனைதான்.
அசோக் செல்வனின் உண்மைகள் அறிந்து அவரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஜனனி. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற ஒரு மர்டர் மிஸ்டரி கதைக்கு ஊட்டி, குன்னூர் என லோகேஷன்கள் ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த்துக்கு உதவி இருக்கின்றன. ஜானு சந்தர் இசையில் பாடல்கள் இனிமை சேர்க்கிறது. பின்னணி இசையும் ஓகே.
இரண்டாவது பாதியில் பல வில்லன் கதாபாத்திரங்களை வைத்திருக்கிறார் இயக்குனர் அதுவே இடைவேளைக்குப் பின் நிறைய குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
கடைசியில் ஐஸ்வர்யா மேனன் பற்றிய ஒரு சஸ்பென்ஸ் உடைவது அற்புதம். ஆனால், இதுதஆன் கிளைமாக்ஸ் என்றால் அத்தனை பேரை அசோக் கொன்றதற்கு அர்த்தமே இல்லை என்றாகி விடுகிறது.
ஒரு சஸ்பென்ஸ் பொருந்திய மர்டர் மிஸ்டரியை அழகாகக் கொடுத்த இயக்குனர் சந்தீப் ஷ்யாம் வெற்றி பெறுகிறார். ஆனால், கடைசியில் அத்தனைக் கொலைகள் தேவை இல்லாதது.
வேழம் – பழி வாங்கிய யானை..!