கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட கார்ப்பரேட் கம்பெனி ஒன்று முயல, அதைக் கண்டுபிடித்துவிடும் சமூக ஆர்வலர் கஸ்தூரி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்கிறார். அதனாலேயே கொலையாகிறார். ஆனால், சமயோசிதமாக அதை பத்திரிகையாளர் வரலஷ்மி வசம் சொல்லிவிட்டுச் சாகிறார். எனவே ஆதாரங்கள் சதிகாரர்கள் கைக்கு கிடைக்காமல் போகிறது.
இதற்கிடையே, வரலட்சுமி தனது தோழி ஒருத்தி வீட்டில் தங்க நேர அந்த வீட்டில் கொள்ளையடிக்க வரும் ஐந்து நபர்களால், அந்த வீட்டிலுள்ள எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். கடைசியில் நாமும் சரி, இயக்குநரும் சரி அந்த ஆதாரங்களை மறந்தே போக, படம் முடியும் நேரம் அது இயக்குநரின் நினைவுக்கு வந்து ஸ்க்ரோலிங் டைட்டில் போடும் நேரத்தில் அது சம்பந்தமாக ஒரு செய்தியைச் சொல்லி முடிக்கிறார் படத்தை.
வரலட்சுமிதான் படத்தின் நாயகி என்பதைப்போல் தோன்றுகிறது. அப்படித்தான் படத்தை ஆரம்பிகிறார்கள். ஆனால், எப்போது அவர் தோழி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தார்களோ அப்போது ‘வரு’வுடன் சேர்ந்து படமும் மூலையில் போய் உட்கார்ந்து கொள்கிறது. ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஒரு வீட்டுக்குள்ளேயே எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் அந்தக் கொள்ளையர்கள் இவர்களை அடிப்பதையே காட்டி எல்லோர் பொறுமையையும் சோதிக்கிறார்கள்.
கஸ்தூரி மீது என்ன கோபமோ முதல் காட்சியுடன் அவரைப் போட்டுத் தள்ளிவிடுகிறார் இயக்குநர். கொள்ளையர்களாக வரும் அரிஜெய், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் சதா கத்திக்கொண்டும், வரலட்சுமியின் தோழியாக நடித்திருக்கும் மாளவிகா சுந்தரையும், அவரது கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் கிருஷ்ணாவையும் அடித்துக்கொண்டுமே முக்கால்வாசிப் படம் கழிகிறது.
இசை அமைத்திருப்பவர் அச்சு ராஜாமணி. பாடல்கள் நினைவில் இல்லை. பின்னணி இசையும் நினைவில் நிற்கவில்லை. பல காட்சிகளில் கொள்ளையர்களின் காட்டுக் கத்தல்தான் கேட்கிறது.
பகத் குமாரின் ஒளிப்பதிவுக்கும் பெரிய வேலையில்லை. ஷிப்டிங் என்பது ரூமுக்கு ரூம் மாறி மாறிப் போவதுதான்.
இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன், படத்தில் வைத்திருக்கும் ட்விஸ்ட்டுகளும் பாத்திரங்கள் ரூம் ரூமாக மாறி மாறிப் போவதுதான். எந்த நோக்கமும் இல்லாமல் இருவர் கொல்லப்படுகிறார்கள். அதனால் படத்துக்கு எந்த விளைவும் ஏற்படவில்லை.
வரலஷ்மி படத்தின் மையப்பாத்திரமாக இருக்க, அவரை ஆக்ஷனில் இறக்கிவிட்டோ அல்லது சமயோசிதமாக முடிவெடுக்க வைத்தோ பிரச்சினைகளில் இருந்து எல்லோரும் தப்பித்தார்கள் என்று கதை நகர்ந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.
வெல்வெட் நகரம் – கொள்ளை நரகம்..!