தயாரிப்பு – Skyman Films International கலைமகன் முபாரக்
இயக்கம் – கவின்
நடிப்பு – முகேன், மீனாட்சி கோவிந்தராஜ், பிரபு, சூரி, ராகுல்
இசை – கோபி சுந்தர்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
தலைப்பைப் பார்த்தாலே அது ஹீரோவின் பெயர் என்பது தெரிந்து விடும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய அலப்பறை நாயகன் என்பது முதல் காட்சி பார்த்தால்தான் புரியும்.
பொள்ளாச்சியில் நடக்கிற கதையில் அன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வரவிருக்க, டீக்கடையில் டீ போடப்படவில்லை. டிரைவர் பஸ்ஸை எடுக்கவில்லை. கடைகள் இயங்கவில்லை. ஊரே ஸ்தம்பிக்கிறது. விஷயம் தெரியாத வெளியூர்க்காரர் கடைக்காரரிடம் யாரும் ‘ஸ்டேட் ரேங்க் எடுக்க இருக்கிறார்களா..?’ என்று விசாரிக்க, அவர் சொல்லும் கதையில் ஆரம்பிக்கிறது ரகளை.
அந்த வேலனாக முகேன். பிக் பாஸ் ஆசியுடன் அடி எடுத்து வைக்கும் முகேனுக்கு முதல் படத்தையே முத்தான படமாக அமைத்துக் கொடுத்து விட்டார் பிக் ஸ்கிரீன் பாஸ் கலைமகன் முபாரக்.
அப்படிப்பட்ட மாணவனாக வரும் முகேன், வசதியுடன் அன்பும் படைத்த அப்பா பிரபுவின் கோபத்துக்கு ஆளாகி பின்பு அவரே மெச்சும் வகையில்… ஓகே ஓகே புரிகிறதல்லவா..? அந்த சின்ன லைன்தான் கதை. ஆனால், அதைச் சொல்லும் திரைக்கதையில் ஒரு ‘அதகள கதகளி’யே ஆடியிருக்கிறார் இயக்குநர் கவின்.
பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் என்று இரண்டு முகத்துக்கும் ஒப்பனை மற்றும் பாடி லாங்குவேஜில் சின்ன வித்தியாசம் காட்டி ரசிக்க வைக்கிறார் முகேன். அலப்பறை செய்யும் வேளையில் ‘அண்டாகாகச சாகசம்’ புரியும் அவர், அப்பா பிரபுவின் முன்னால் மட்டும் ஒண்ணும் தெரியாத சத்யராஜாக குழந்தை முகத்தை வைத்துக்கொள்வது ஸ்மார்ட்.
உயரம், அதற்குத் தோதான உடல்வாகு, ரசிக்கத்தக்க முகம், நடன ஆற்றல், இசை அறிவு எல்லா ஏரியாக்களிலும் நீட்டாக வரும் முகேனுக்கு ஆக்ஷனும் நன்றாக வருகிறது. கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தால் அடுத்த சிவகார்த்திகேயன் அவர்தான்.
கண்டதும் முகேன் காதல் கொள்கிற பதுமையாக மீனாட்சி கோவிந்தராஜன். அழகும், வயதும் பொருந்திய நடிகைகளுக்கு இருக்கும் ஒரு வசதியே நடிக்கவில்லை என்றாலும் அழகாகத் தெரிவதுதான். முகேனின் ஆக்ஷன்களுக்கு மீனாட்சியும் பெரிதாக ரியாக்ஷன் கொடுக்கவில்லை என்றாலும் டேக் இட் ஃபார் கிரான்டட் டைப் அழகில் வசீகரித்து விடுகிறார். லடாக்கில் பூத்த ஆப்ரிகாட் பூவைப்போல் ஃப்ரெஷ்ஷாக இருப்பவர் ஆதரவில்லாதவர் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை. ஆனால் இவருக்கு இந்தப்படம் இந்திய மொழிப்படங்களில் பெரிய ஆதரவைப் பெற்றுத்தரும்.
பிரபு ஒரு படத்துக்குள் வந்து விட்டாலே அந்தப்படம் குடும்பங்களுக்கான படம் என்பது அக்மார்க் ஆணித்தரம். அன்பான அப்பாவாகவும், அப்பா பயன்படுத்திய காரையே அப்பாவாக நினைத்து வணங்கி வருவதால் பொறுப்பான மகனாகவும் வரும் அவர், அந்த நடிப்பிலேயே நீதி, தர்மம் பிசகாதவர் என்று உணர்த்தி விடுகிறார். மகனிடம் முகம் கொடுத்துப் பேசா விட்டாலும், முகேன் மீது மறைமுக அன்பைப் பொழிவதில் நடிகர் திலக ‘டச்..!’
படம் முழுதும் கலகலப்பாகப் பயணப்படுவதில் முதல் பாதிக்கு பிராங்க் ஸ்டார் ராகுலும் பின்பாதிக்கு சூரியும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
படத்தில் சூரி இருக்கிறார் என்பதையே மறக்கடிக்கும் அளவில் முன்பாதியில் ராகுல் அவ்வளவு லந்தடிக்கிறார். ப்ளஸ் டூவை ஐந்து வருடமாகப் படித்துவிட்டு விஷயத்தைச் சொல்லாமலேயே எம்.எல்.ஏவை ரெகமண்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு கல்லூரி அட்மிஷனுக்கு அவர் வரும் காட்சிகள் சிரித்து ரசிக்கத்தக்கவை.
ஒரே காட்சியில் வரும் எம்.எல்.ஏ வாக வரும் பேராசிரியர் ஞானசம்பந்தனும் அந்த ஒரே காட்சியில் பின்னியிருக்கிறார். “நான் எம்.எல்.ஏ ஆனப்ப ப்ளஸ் டூ போனவன் இப்ப என் பதவிக்காலம் முடியும்போதுதான் முடிச்சியா..?” என்று அவர் கேட்கும்போது கல் நெஞ்சக்காரனும் கலகலப்பாவான்.
பக்கா ட்ரீட்மென்ட்டின் மீதிருக்கும் தைரியத்தில் முக்கிய காமெடியன் சூரியை இடைவேளையின் போது அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். சூரியோ படத்தில் இரண்டாவது நாயகனாகவே வருகிறார். முகேனுக்கு நெருக்கடியால் நிச்சயமாகும் மரியா வின்சென்ட்டைக் காதலிக்கும் வேடத்தில் வரும் சூரி இடம்பெறும் காட்சிகள் அனைத்திலும் வயிறு முட்ட சிரிக்கலாம். கூடவே தம்பி ராமையாவும் சேர்ந்து கொண்டாரா, பின்னி எடுக்கிறது இந்தக் கூட்டணி.
தம்பி ராமையாவின் மனைவியாக வரும் சுஜாதாவுக்கும் ஓரிரு காட்சிகள்தான் வாய்ப்பு. ஆனால், அதிலேயே “சொன்னேனே, கேட்டீங்களா… இப்ப போட்டுட்டாங்கள்ள..?” என்று அவர் பேசும் காமெடி வசனம் பல காலத்துக்கு மீம்ஸுக்கு உதவும்.
அதேபோல் நிச்சயத்தை நிறுத்த அப்பாயின்ட் ஆகும் சாமிநாதன் வரும் காட்சி வெடித்துச் சிரிக்க வைக்கிறது. இப்படி ஒரு காட்சியில் வருபவர்களைக் கூட வீணடித்துவிடாத இயக்குநரின் திறமை அட்டகாசம். இவரை இனி அடுத்த படங்களில் உச்ச ஹீரோக்களுடன் பயணிக்கப் பார்க்கலாம்.
வில்லன் ஹரீஷ் பெராடியும், அவர் அப்பா பில்லி முரளியும் பார்வையிலேயே பயமுறுத்துகிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வனின் ஒளிப்பதிவில் பொள்ளாச்சியே இந்திர லோகமாக ஜொலிக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அப்படி ஒரு சிங்க்.
தொழில்நுட்ப ரீதியாக ஹைடெக், ஹை ஃபை படங்கள் வந்து கொண்டிருக்கும் காலத்தில் இப்படி ஒரு சென்டிமென்ட் டிராமாவை கொடுத்திருந்தாலும் இன்றைய இளைஞர் டிரெண்டிங்கில் முன்னணியில் இருக்கும் பிக் பாஸ் முகேன், பிராங்க் ஸ்டார் ராகுல், யூ டியூப் புகழ் பிரிகிடாவையெல்லாம் உள்ளே வைத்து ஒரு ஸ்வீட் பீடாவாகத் தந்திருக்கும் டீமுக்குப் பாராட்டுகள்.
வேலன் – வெற்றி முகம்..!
– வேணுஜி