கொடைக்கானல் மலையில் இருக்கும் எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், கதை அந்த அழகைப் பற்றியதல்ல..!
அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி என்ன, இவை எல்லாம் எங்கே போய் முடிகின்றன என்பதுதான் கதை.
படத்தின் வில்லனே கதாநாயகன் எனும்படியாக ஆர்.கே சுரேஷ். கடந்த காலத்தில் போதை சாம்ராஜ்யத்தை தன்வசம் வைத்திருந்த வித்யா பிரதீப்பின் கணவர் ஆடுகளம் நரேனைக் கொலை செய்து அதைக் கைப்பற்றியவர், ஏக போக சொத்துக்கு அதிபதியாக ஏகபோக சொத்துக்கு அதிபதியாக இருக்கும் மீனாட்சி கோவிந்தராஜனிடமிருந்து அவற்றை அபகரிக்க, அவரது காலம் சென்ற அப்பா மனோ வாழ்ந்த காலத்தில் இருந்து முயன்று கடைசியில் முழு வில்லனாகவே மாறிவிடுகிறார்.
அந்த பாத்திரத்துக்கு ஆர் கே சுரேஷ் தோற்றமும், நடிப்பும் மிகச் சரியாக பொருந்தி இருக்கிறது.
இளமையுடன் இருப்பதாலும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் காதலிப்பதாலும் துருவன் மனோ ஹீரோ அந்தஸ்து பெறுகிறார். உடலைக் குறைத்து நடிப்பைக் கூட்டினால் அவர் ஒரு ரவுண்டு வரலாம்.
குழந்தையில் இருந்தே நல்ல மனம் கொண்டு வாழும் மீனாட்சி கோவிந்தராஜனுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்க வேண்டாம். அவரது இளமையும் அழகும் படத்தின் பிளஸ்.
வித்யா பிரதீப் அத்தனை முறை முயன்றும் ஆர்.கே.சுரேஷ் அவரைக் கொலை செய்யாமல் இருப்பது ஆச்சரியம்தான். அதேபோல் அடாவடி செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் அந்த சொத்தை அடைவதற்காக 20 வருடம் காத்திருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதுபோன்ற லாஜிக் குழப்பங்கள் படம் நெடுக இருக்கின்றன.
பளிச்சென்ற ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரரான எம்.ஏ.ஆனந்த் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானலின் வனப்பை இன்னும் கூட காட்சிப்படுத்தி இருக்க முடியும்.
இசையமைப்பாளர் மாரிஸ் விஜய், ஏ.ஆர்.ரகுமானின் பரம ரசிகர் போல் இருக்கிறது. எல்லா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசைப் புயலின் தாக்கம் அதிகம்.
இயக்குனர் பித்தாக் புகழேந்தி, போதையினால் விளையும் கொடுமைகளை சொல்வதற்கு பதிலாக போதை சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும், அழிவையும் மட்டும் முன்னிறுத்தி இருக்கிறார். போதை பற்றிய ஆரம்ப கட்ட ஆராய்ச்சியை அவ்வளவு விலாவாரியாக சொல்லி இருக்க வேண்டியதில்லை.
வட்டக்கானல் – கானல் நீர்..!
– வேணுஜி
–