நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில் நடப்பதால் ‘தாதா இன்றி அமையாது வடசென்னை’ என்கிற ரீதியில் தண்ணீர்த் தொழிலைக் கையில் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களின் மோதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்.
இதுவரை வடசென்னை என்றாலே கால்பந்தும், பாக்சிங்கும் பிரதான வேலைகளாகச் சொல்லப்பட்டு வந்ததை மாற்றி இதில் வாட்டர் கேன் போடும் தொழிலைச் சொல்கிறார்கள். ஆனால் வாட்டர் கேன் போடுவது வடசென்னையை மட்டுமே சார்ந்த தொழில் அல்ல என்பது வேறு விஷயம்.
அங்கே முறைப்படி தண்ணீர் ஆலை வைத்து தண்ணீர் கேன்களை சப்ளை செய்து வருகிறார் தொழிலதிபர் ராதாரவி. அவருக்கு வலக்கையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் இருந்து வருகிறார். துஷ்யந்த்துக்கு அந்த ஏரியாவில் வசிக்கும் கேப்ரில்லாவுடன் ஒரு காதலும் இருந்து வருகிறது.
இன்னொரு பக்கம் சரண்ராஜ் சொந்தமாக தண்ணீர் கேன் ஆலை எல்லாம் இல்லாமல் உபரியாகத் தண்ணீரை பிடித்து தொழில் நடத்தி வருகிறார். கூடவே சுண்ட கஞ்சி வியாபாரமும் செய்து வருகிறார். இதில் அடிக்கடி போலீஸ் அவரது ஏரியாவை மோப்பம் பிடித்து வருகிறது.
ஆனால், இவர்கள் இருவருக்கும் எந்த மோதலும் இல்லை. இருவருமே அடிப்படையில் நல்லவர்கள் என்பதால் விட்டுக் கொடுத்தது தான் தொழில் செய்து வருகிறார்கள் ஆனால் சரண் ராஜின் மனைவி மகேஸ்வரி மகாவில்லி.
பேராசைக்காரியான அவர் தனது தம்பி யுடன் சேர்ந்து ராதாரவிக்கு தீராத தலைவலியைத் தந்து வர, இதெல்லாம் எப்படி போய் எங்கே முடிகிறது என்று சொல்கிற கதை.
வில்லாதி வில்லர்களுக்கெல்லாம் வில்லனான ராதாரவி இதில் நல்லவராக வருவது நயமாக இருக்கிறது. ஆனாலும் கடைசிக் காட்சியில் ஒரு மிரட்டு மிரட்டும் போது, அவர் ‘தாதாவுக்கு எல்லாம் தாதா’ என்று புரிகிறது.
அவரது வலக்கையாக வரும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இதில் மிகவும் இளைஞனாக இருக்கிறார். அவரது காதலும் கூட இளம்பிள்ளைக் காதலாகவே தோன்றுகிறது. ஆனால் எந்த ரவுடியையும் எதிர்த்து நிற்பதில் பயமின்றி இளம் கன்றாகத் தெரிகிறார்.
நாயகி கேப்ரில்லா அநியாயத்துக்குப் பள்ளி மாணவி போல் இருக்கிறார். அந்தப் பருவத்துக்கு அவர் காதலிப்பதெல்லாம் டூ மச்.
சரண்ராஜ்க்கும் சற்றே வித்தியாசமான பாத்திரம். சற்றே திக்கு வாயுடன் பேசும் அவர் அதைப் படம் முழுவதும் அற்புதமாகக் கையாண்டிருப்பது அவரது திறமைக்குச் சான்று.
பார்வைக்கு அவரது மகள் போல் இருந்தாலும் மகேஸ்வரி மிரட்டி இருக்கிறார்.
மகேஸ்வரியின் தம்பியாக வரும் வில்லன் சங்கர் நாக் விஜயன் பார்வைக்கு பயங்கரமாக இருக்கிறார். நடிப்பில் அதற்கு நியாயமும் சேர்க்கிறார்.