அண்டா பாலாபிஷேக பிரச்சினை எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து காலைக்காட்சியில் சின்ன கட்டவுட், பால் பாக்கெட் அபிஷேகம் என்று கையடக்க கோலாகலத்துடன் இன்று சிம்பு நடித்திருக்கும் இந்தப்படம் ரிலீசாகி விட்டது.
சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிம்பு நடிக்கும் படம் எப்படியும் அவரது வாழ்க்கையை ஒட்டியே திரைக்கதை எழுதப்படும். இரண்டையும் சேர்த்தால் எதிர்பார்க்கப்பட்ட அதே டெம்ப்ளேட்டில் இந்தப்படம்.
மிகப்பெரிய செல்வந்தரான நாசரின் 80-வது வயது பிறந்த நாளுக்கு அவரது பேரன் தருவதாக சொல்லியிருக்கும் பிறந்தநாள் பரிசுதான் கதை. அது சாதாரண பரிசல்ல. பிரிந்துபோன நாசரின் மகளை மீண்டும் அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்புதான் அது. அதை ஏற்கும் சிம்பு சொல்படி தன் அத்தை ரம்யா கிருஷ்ணனை நாசரிடம் கொண்டு சேர்த்தாரா என்பது கதை.
கொஞ்சம் கதை வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அந்த கிரெடிட்டும் இதன் ஒரிஜினல் தெலுங்குப் படத்துக்குதான். ஆனால், எந்தக் கலர்த்துணி கொடுத்தாலும் அதை ஜிப்பாவாக தைத்தால் எல்லாம் ஒன்றுபோலிருக்கும் என்பது போல் இந்தக் கதையை சுந்தர்.சி தனக்கே உரிய வகையில் திரைக்கதையாக்கி ஜிப்பாவாக்கி விட்டார்.
சிம்பு நடித்து சொன்ன நேரத்துக்கு வந்த படம் என்பதே இந்தப்படத்தின் முதல் வெற்றி. அதையே ஒரு இடத்தில் வசனமாகவும் வைத்திருக்கிறார்கள். “நான் சினிமாவில நடிக்கட்டுமா..?” என்று சிம்பு கேட்க, “அதுக்கு நேரத்துக்கு ஷூட்டிங் போகணும்…” என்று விடிவி கணேஷ் சொல்லும் பதிலில் தியேட்டர் அதிர்கிறது.
சிம்புவுக்கு வாகான வேடம். லந்து, பஞ்ச் டயலாக், கலர்ஃபுல் கேர்ள்ஸ் என்று அவருக்காகவே அமைந்த வேடம் என்பதால் எளிதாகச் சுமக்கிறார். ஒரு சுற்று பெருத்தும் இருப்பதால் அதை மறைக்க ஒரு வித்தியாசமான காஸ்ட்யூம் போட்டுக்கொண்டு ஆடிப் பாடுகிறார். இத்தனை வெயிட்டைத் தாங்கி ஆடுவதை விட கொஞ்சம் இளைத்தால் தேவலை, சிம்பு..!
நாயகிகளில் கேதரின் தெர்சாவுக்கு இட ஒதுக்கீடு குறைவு. அவரை விட மேகா ஆகாஷுக்கு கொஞ்சம் பெரிய கேரக்டர் என்பதில அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், கிளாமரில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆடைகளில் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் இருக்கிறார்கள். ஆனால், பெரிய ஷாக் யோகிபாபு சோபிக்காதது. அதுவும் அவர் வரும் அகலிகை நாடகம் டப்பிங்கிலாவது பார்த்து திருத்தியிருக்க அல்லது தூக்கியிருக்க வேண்டியது.
திரை கொள்ளாத அளவுக்கு ரம்யாகிருஷ்ணன், பிரபு, நாசர், சுமன், ராதாரவி, மகத் என்று ஏகப்பட்ட கூட்டம். ஆனால், கதைப்படி ரம்யாகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட மற்றவர்களுக்கு இல்லை.
சிம்பு கிடைத்து விட்டார் என்று அவரவரும் அவரை மனதில் வைத்தே காரியமாற்றியிருக்கிறார்கள். வசனகர்த்தா செல்வபாரதி ஒருபக்கம் சிம்புவை மனதில் வைத்தே “நீ வேஷம் போடுற ராஜா நான் பொறந்ததுல இருந்தே ராஜா…”, “நீங்க ராசியான ஆளு சார், நீங்க காதலிச்ச பொண்ணுங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்குது…”, “எனக்குத்தான் ஆளே இல்லியே…” என்று ‘வச்சு’ எழுதித் தள்ளியிருக்கிறார்.
இன்னொருபக்கம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியும் “எனக்கா ரெட்கார்டு, எடுத்துப்பார் ரெகார்டு…’, என்று அவரும் சிம்புவை வைத்தே வேலை பார்த்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி பாடல்கள் ஒரே ரகம். அதில் ‘வாங்க மச்சான்…’ ரீமிக்ஸ் அமர்க்களம்..! கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய ப்ளஸ்.
‘வந்தா ரம்யாகிருஷ்ணனோடதான் வருவேன்’ என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.